பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி
பாகிஸ்தான் ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அந்த நாடு, அணு ஆயுத திட்டங்களிலும் சரி, ஏவுகணை திட்டங்களிலும் சரி, தவறாக எதுவும் செய்யவில்லை என கூறி வருகிறது. இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த நாட்டின் ஏவுகணை திட்டங்களில் தொடர்பு கொண்டிருப்பதாக கூறி, 7 நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒபாமா அரசு அதிரடியாக பொருளாதார தடை விதித்துள்ளது.
அந்த நிறுவனங்கள் லாகூர் அஹாத் இன்டர்நேஷனல், வாஹ் கண்டோன்மென்ட் ஏர் வெப்பன்ஸ் காம்பிளக்ஸ், இஸ்லாமாபாத் என்ஜினீயரிங் சொல்யூசன்ஸ், கராச்சி மெரிடைம் டெக்னாலஜி காம்ப்ளக்ஸ், இஸ்லாமாபாத் நேஷனல் என்ஜினீயரிங் அன்ட் சயின்டிபிக் கமிஷன், ராவல்பிண்டி நியூ ஆட்டோ என்ஜினீயரிங், சட்டார் யுனிவர்சல் டூலிங் சர்வீசஸ் ஆகியவை ஆகும்.
இந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்து, அமெரிக்க வர்த்தக துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “அமெரிக்க தேசிய பாதுகாப்பு அல்லது வெளிநாட்டு கொள்கை நலன்களுக்கு மாறாக செயல்படுவதாக கருதி, பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் ஏற்றுமதி நிர்வாக கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்கீழ் கொண்டு வரப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.
மேலும், “குறிப்பிட்ட உண்மைகள் அடிப்படையில் இந்த அரசு நிறுவனங்கள், அரசியல் அதிகாரத்தின்கீழ் நாட்டுக்காக மறைமுகமாக செயல்படும் பேரஸ்டடால் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு, வெளியுறவு கொள்கைக்கு மாறான செயல்பாடுகளில் தொடர்பு கொண்டுள்ளன என்று நம்புவதற்கு நியாயமான காரணம் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இந்த 7 நிறுவனங்களும் ‘இயர்’ என்றழைக்கப்படுகிற (அமெரிக்க) நிர்வாக கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்கீழ் அனைத்து பொருட்களுக்கும் உரிமம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இந்த நிறுவனங்கள் என்ன மீறல்களில் ஈடுபட்டன, அவை சர்ச்சைக்கிடமான எந்த பொருளை ஏற்றுமதி அல்லது மறு ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்தன என்பது குறித்து அமெரிக்க வர்த்தக துறையின் அறிவிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை, பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply