ராஜபக்சே எச்சரிக்கையை உதறித்தள்ளினார்: இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த சிறிசேனா சபதம்
இலங்கையில் 1983-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் கால் நூற்றாண்டைக் கடந்து நீடித்தது. கடந்த 2009-ம் ஆண்டு, மே மாதம் 18-ந் தேதி இந்தப் போர் முடிவுக்கு வந்தது.
ஆனாலும் அங்கு தமிழர்களும், சிங்களர்களும் இணக்கமாக வாழ்கிற நிலை உருவாகவில்லை. சிங்களர்களைப்போன்று தமிழர்களுக்கு சம உரிமை, மரியாதை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்கு அதிபர் சிறிசேனா ஆட்சிக்கு வந்து அடுத்த வாரம் 2-வது ஆண்டு நிறைவு பெறுகிறது.
அங்கு சிறுபான்மை தமிழ் மக்களுக்கு ஓரளவு அரசியல் சுயாட்சி உரிமையை வழங்குகிற விதத்தில் புதிய அரசியல் சட்டத்தை கொண்டு வர சிறிசேனா அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இலங்கை மக்களிடம் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்தி இந்த ஆண்டு புதிய அரசியல் சட்டம் அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்கு மாறாக, புத்தாண்டையொட்டி முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒரு செய்தி விடுத்துள்ளார். அதில் அவர், ஒற்றை ஆட்சித்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தனது புத்தாண்டு செய்தியில், “புதிய ஆண்டு நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும். தமிழர் பிரச்சினையில் ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு. இதை புதிய அரசியல் சட்டம், புதிய ஆண்டில் கொண்டு வர வேண்டும்” என கூறி உள்ளார்.
ஆனால் இலங்கையில் நல்லிணக்கமான சூழ்நிலை ஏற்படுவதற்கு ராஜபக்சே தொடர்ந்து தடையாக உள்ளார் என்பது அவரது எச்சரிக்கையில் வெளிப்படுகிறது.
இருந்தபோதிலும், அதை அதிபர் சிறிசேனா உதறித்தள்ளிவிட்டார். அவர் இலங்கையில் நல்லிணக்கமான சூழ்நிலை உருவாக சபதமிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில், நல்லிணக்கமான சூழலை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு, அனைத்து சமூகத்தினரிடமும் ஒற்றுமை நிலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோன்று பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயும் அதிபரின் கருத்துக்கு வலு சேர்க்கிற விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “தேசிய ஐக்கிய அரசை உடைக்க மேற்கொள்ளப்பட்டபோதிலும், நல்லாட்சி வழங்கவும், ஜனநாயகத்தை தழைக்கச்செய்யவும், பொருளாதார வளம் ஏற்படுத்தவும் அளித்த வாக்குறுதியில் இருந்து தடுமாற்றம் அடைய மாட்டோம்” என கூறி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply