சசிகலா தமிழக முதல்வராக வேண்டும்: தம்பிதுரை
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று (திங்கள்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “கட்சித் தலைமையும், ஆட்சி அதிகாரமும் ஒருவரிடமே இருக்க வேண்டும். இரண்டும் தனித்தனியாக இருப்பது ஏற்புடையதல்ல.
சசிகலா முதல்வராவது கட்சிக்கும், தமிழகத்துக்கும் இன்றியமையாதது.
எனவே, அதிமுகவினரின் விருப்பத்தை ஏற்று, கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, விரைவில் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தம்பிதுரை அறிக்கையின் முழுவிவரம்:
“அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் கழகத் தொண்டர்கள் மத்தியில் சசிகலா ஆற்றிய உரை அனைவரது உள்ளத்தையும் உருகச் செய்வதாக அமைந்திருக்கிறது.
மிகுந்த கண்ணியத்தோடும், கடமை உணர்ச்சியோடும் தனது உரையில் எடுத்துரைத்த கருத்துக்கள், அதிமுக சரியான, தகுதியான ஒரு பெருந்தகையின் கையில் ஒப்படைத்து இருக்கிறோம் என்ற மன நிம்மதியை அனைவருக்கும் அளித்திருக்கிறது.
தமிழக மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படவும், தமிழ் மொழியின் தொன்மையும், சிறப்பும் போற்றப்படவும் எல்லோருக்கும் பயன்தரும் ஒரு ஜனநாயக ஆட்சி முறை உருவாகவும் பெரியாரை மையமாக வைத்து, பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த திராவிட இயக்க அரசியல் பயணம் அவர் அமைத்துத் தந்த பாதையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அடிச்சுவட்டில் இன்னும் பல தலைமுறைகளுக்கு பயணிக்கும் என்ற நம்பிக்கையை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துவதாக முதல் பேச்சு அமைந்திருந்தது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.
27 ஆண்டுகள் கழகப் பொதுச் செயலாளராக மகத்தான பணிகளை ஆற்றிய ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ‘இந்த கழகமும், இதன் கோடானுகோடி தொண்டர்களும் என்ன ஆவார்களோ!’ என்று கலங்கியிருந்த வேளையில், கலங்கரை விளக்கமாய் சசிகலா திகழ்கிறார்.
ஆட்சித் தலைமை ஒருவரிடமும், கட்சித் தலைமை இன்னொருவரிடமும் இருப்பது, இந்தியாவில், மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதையும்; ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் ஒன்றாக, ஒரே இடத்தில், ஒருவரிடமே இருக்கும் போது அந்த அரசு ஒருமித்த சிந்தனையோடும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களோடும் இயங்குவதை பார்த்திருக்கிறோம். ஆட்சியும், கட்சியும் வெவ்வேறு தலைமைகளைப் பெற்றதால் பல்வேறு சங்கடங்களுக்கும், செயல்திறன் இல்லாத நிலைக்கும் சில அரசுகள் தள்ளப்பட்டு, காலப்போக்கில் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்திருப்பதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது.
சசிகலாவோடு அரசியல் ரீதியாகவும், கழகத் தேர்தல் பணிகள், கழக நிர்வாகம் சம்பந்தப்பட்டும் கடந்த 33 ஆண்டுகளாக தொடர்பில் இருந்த என்னைப் போன்ற பலநூறு பேர்களுக்கு அவருடைய மதி நுட்பமும், அரசியல் சாதுர்யமும் எல்லவற்றுக்கும் மேலான ஜெயலலிதாவைப் போலவே சிந்தித்து, தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகளுக்கு இடம் தாராமல் முடிவெடுக்கும் ஆற்றலும் நன்கு தெரியும்.
இதற்கு எடுத்துக்காட்டாக சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு ஆற்றிய உரையில் “ஜெயலலிதா, நமக்கு கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை, அவரது பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றுவோம்.
ஜெயலலிதா நிர்மாணித்த இந்த இயக்கம், மக்களின் இயக்கம். இந்த அரசு மக்களின் அரசு. அவர் காட்டிய வழியில் தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில் தான் நமது பயணம்” என்றும் “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக, என்னை ஒருமனதாக தேர்வு செய்திருக்கும் உங்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப, என் வாழ்வின் எஞ்சிய காலத்தை அர்ப்பணித்து உழைப்பேன். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், ஜெயலலிதா வழியில் பின்பற்றுவோம்” என்றும் கூறியிருக்கிறார்.
கட்சித் தலைமையையும், ஆட்சி அதிகாரமும் ஒரே இடத்தில் இருந்தால் தான் ஜெயலலிதா விட்டுச் சென்ற கழகப் பணிகள் மற்றும் அரசு திட்டங்கள் அவர் எதிர்பார்த்தபடி செய்ய இயலும் என்பது எல்லோருடைய திடமான எண்ணமாகும்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க நாடு இருக்கும் சூழ்நிலையில் அதிமுக அரசு மென்மேலும் சிறப்புடன் செயல்பட்டு மக்களின் பேராதரவை, எம்ஜிஆர், ஜெயலலிதா பெற்றிருந்ததைப் போல தொடர்ந்து பெற்றிடவும் சசிகலா உடனடியாக தமிழ் நாடு முதலமைச்சராக ஆட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்று அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
திறமை, உழைப்பு, மக்கள் மீது அன்பு, கழகத் தொண்டர்கள் மீது அக்கறை என்பவைற்றில் ஜெயலலிதாவைப் போலவே சிறந்தவராகத் திகழும் சசிகலா கழகத்தை கட்டிக் காத்து, வழி நடத்தும் பெரும் பணிகளுக்கிடையே தமிழ் நாட்டின் முதலைச்சராகவும் பொறுப்பேற்று கழகத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் மிக,மிக இன்றியமையாதது என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.
என்னைப் போன்ற கழகத் தொண்டர்களின் மனநிலைய ஏற்று, விரைவில் சசிகலா தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply