வீர விளையாட்டை அனுமதியுங்கள் மத்திய – மாநில அரசுகளுக்கு : மு.க. ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இன்று ( செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் திமுகவின் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றியதாவது, ”தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். அதனை உங்களயோடு சேர்ந்து காணலாம் என்று காத்திருந்தேன். ஆனால், ஜல்லிக்கட்டு பேட்டிகளை நடத்த அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உங்களோடு போராட்டம் நடத்தவே நான் இப்போது இங்கு வந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

”எனது ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணத்தில் தொழிலாளர்கள், பெண்கள், விவசாயிகள் என்று பலதரப்பட்டோரை சந்தேத்தேன். அலங்காநல்லூரில் இப்பயணம் தொடர்பாக 2015-இல் நான் வந்த போது, இது குறித்து வலியுறுத்தி பேசினேன். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்தி ஒரு உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்தோம்” என்று நினைவுகூர்ந்த ஸ்டாலின், அப்போது மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று அப்போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

திமுக தற்போது ஆட்சி பொறுப்பில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் சூழலை ஏற்படுத்தி இருப்போம் என்று தனது பேச்சில் குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதற்கு காரணம் அதிமுக ஆட்சி தான் என்று குற்றம்சாட்டினார்.

அதிமுக அரசு மீது குற்றச்சாட்டு

மேலும் ஸ்டாலின் தன் உரையில் கூறியதாவது, ”அவசர சட்டமொன்றை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அதிமுக அரசு வழிவகை செய்ய வேண்டும். தமிழ்த்தாய் சிலை மைப்போம் என்று கூறிய அதிமுக அரசு, அது தொடர்பான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை. அதே போல், ஜல்லிக்கட்டு பிரச்சனையில் அதிமுக அரசு மெத்தனமாக நடந்து கொள்கிறது” என்று கூறினார்.

”வரும் தைத்திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக இளைஞர்களின் உணர்வுகளையும், தமிழ் பண்பாட்டின் பெருமையையும் மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

”தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2012ல் நிச்சயம் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று சட்டமன்றத்தில் வாக்குறுதியளித்தார். ஆனால், ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இன்று நடைபெறும் இந்தப் போராட்டத்தில் எல்லாக்கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்று அழைத்தோம்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

”ஆட்சியை காட்சிப் பொருளாக வைத்திருந்தீர்கள், காளைகளையும் காட்சிப் பொருளாக மாற்றிவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு நடக்க அனுமதித்தால், அதில் பங்கேற்பேன்” என்று கூறிய ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு பற்றி பேசும்போதெல்லாம் அது நடத்தப்படும், உறுதியாக நடத்தப்படும் என்ற வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். அதை நிறைவேற்றும் சூழல் வந்திருக்கிறதா? என்று கேள்வியெழுப்பினார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பின்னர், தமிழக அரசின் வற்புறுத்தலால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நலவாரிய கூட்டமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்று இந்தாண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இவ்வழக்கில் விசாரணை தற்போது முடிவடைந்துள்ள சூழலில், தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply