அணு ஆயுத ஏவுகணைகளை செலுத்தும் திறன் வடகொரியாவுக்கு இல்லை: அமெரிக்கா கருத்து

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு கடந்த ஆண்டுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

இதன்காரணமாக, வடகொரியாமீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. எனினும், தற்காப்பு என்ற பெயரில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

இந்த ஏவுகணைகள் அனைத்தும் வடகொரியாவில் இருந்து சுமார் 3400 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கி அழிக்கும் ஆற்றல் படைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் செப்டம்பர் மாதம்வரை ஐந்துமுறை அத்துமீறலாக ஏவுகணை சோதனைகளை இந்நாடு நடத்தியுள்ளது.

வடகொரியாவின் இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

ஆனாலும், மாதந்தோறும் ஒருமுறையோ, இருமுறையோ இந்த ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்ள வடகொரியா தவறுவதில்லை. வடகொரியாவின் இந்த ஆணவத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையை பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. இதன் அடிப்படையில் வடகொரியா மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய தடைகளை விதித்தது.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தடை செய்யப்பட்ட நெடுந்தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

அமெரிக்காவை தாக்கும் நோக்கத்தில்தான் இதைப்போன்ற நெடுந்தூர ஏவுகணைகளை வடகொரியா தயாரித்து வருகிறது என்ற நிலையில், வடகொரியா அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவது என்பது ஒருபோதும் நடக்கப் போவதில்லை என அமெரிக்க வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று ‘டுவீட்’ செய்திருந்தார்.

இந்நிலையில், அணு ஆயுத ஏவுகணைகளை செலுத்தும் திறன் வடகொரியாவுக்கு இல்லை என அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜான் கிர்பி, ‘கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணைகள், அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை தயாரிப்பதில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தீவிரம் காட்டி வருவதை நாங்கள் அறிந்துள்ளோம்.

ஆனால், அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனை அந்நாடு பெற்றுள்ளது என்பதை தற்போதைய நிலவரப்படி ஏற்றுக் கொள்வதற்கில்லை’ என்று கூறியுள்ளார்.

வடகொரியாவின் இத்தகைய அத்துமீறலை தட்டிக்கேட்க சீனா தவறி விட்டதாக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இதைப்போன்ற மதிப்பீடு எங்களுக்கு ஏற்புடையதல்ல’ என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply