சசிகலா போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்ய எம்.எல்.ஏ.க்கள் ஆர்வம்
ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியிலும், கட்சியிலும் ஏற்பட்ட வெற்றிடத்தை சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் பூர்த்தி செய்துள்ளனர்.முதல் – அமைச்சர் பொறுப்பை ஓ.பன்னீர் செல்வமும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலாவும் ஏற்றுள்ளனர்.
இந்த நிலையில் சசிகலா முதல்-அமைச்சர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்ற கோஷம் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோரும், சில எம்.எல்.ஏ.க்களும் சசிகலா உடனடியாக முதல்- அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்தினார்கள்.
பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான தம்பித்துரையும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். பொதுச்செயலாளர் பதவியையும் முதல்-அமைச்சர் பதவியையும் ஒருவரே வகித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று அவர் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
முதல் – அமைச்சர் பதவியை ஏற்க சசிகலா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் அவருக்கு வழி விடும் வகையில் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய ஓ.பன்னீர் செல்வமும் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த மாற்றம் எப்போது நிகழும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி மட்டும் காலியாக உள்ளது. அந்த தொகுதியில் சசிகலாவை நிறுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பலரும், சசிகலா வேறு ஒரு உறுதியான வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சசிகலாவுக்காக விட்டுக் கொடுக்கும் வகையில் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் சசிகலாவை தினமும் சந்தித்து, பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக ஆர்வமுடன் கூறி வருகிறார்கள்.
தற்போது அந்த பட்டியலில் சில அமைச்சர்களும் இடம் பிடித்துள்ளனர். அவர்களும் சசிகலாவை சந்தித்து தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முழு மனதுடன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சசிகலாவுக்காக பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
சசிகலாவுக்காக ராஜினாமா செய்ய தயாராக இருப்பவர்களில் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் முதல் இடத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நின்று ஜெயித்த தொகுதி என்பதால் அங்கு சசிகலா போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தங்கத்தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. கூறுகையில், “ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகும். 1984-ல் மறைந்த எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இங்கு போட்டியிட்டு வென்றார்.
2001-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்காக நான் அந்த தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தேன். இப்போது சசிகலாக்காகவும் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.
அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டால் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம் என்றார்.
தி.நகர் எம்.எல்.ஏ. சத்திய நாராயணன், பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல், மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை, திருத்தணி எம்.எல்.ஏ. நரசிம்மன் ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தங்கள் தொகுதியில் சசிகலா போட்டியிட்டால் அது தங்களுக்கும், தங்கள் தொகுதிக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இருக்கும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் தாமாக முன்வந்து பதவியைத் துறக்க தயாராகி உள்ளனர். இதையடுத்து எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று சசிகலா தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் முதல்வர் பதவியை ஏற்பார் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் எதிர் பார்ப்புடன் உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply