புலம் பெயர் தமிழர்களே தாயகத்தில் புதிய காற்று வீச அனுமதியுங்கள் : சிறீ ரெலோ

புதிதாக பிறந்துள்ள ‘விரோதி’ என்றழைக்கப்படும்  இப்புத்தாண்டு, ஒரு மனித ஆயுள் காலத்தை அறுபது வருடங்களாக முன்னோர்கள் வகுத்த கணக்குப்படி, இருபத்திமூன்றாவது ஆண்டாக வரும். நான்கு யுத்த காண்டங்களைக் கண்ட ஈழப் போரின் வயது அரைவாசி மனித ஆயுளை தின்று தீர்த்து விட்டது. தீராத பசிகொண்ட யுத்த பிர(பா)புக்களுக்கு, பிறந்த இந்தப் புத்தாண்டு, அறம் சார்ந்து கடன் தீர்க்கும் ‘விரோதி’யாக மலர வேண்டுமென்பதே, இந்த யுத்தத்தில் தங்கள் வாழ்வை இழந்து தவிக்கும் சாமானியர்களின் விருப்பமும் வேண்டுதலும் பிரார்த்தனையும் ஆகும்.

எமது தாயகமான இலங்கையினதும் அதன் பூகோள அமைவிடமான இந்திய உப கண்டத்தினதும் மற்றும் சர்வதேசத்தினதும் புதிய போக்குக்களையும் அதன் ஒழுங்கீனமான ஒழுங்குகளையும் கைவசம் உள்ள பழைய சூத்திரங்கள் விளங்கவும் விளக்கவும் வினையாற்றவும் போதுமானவை அல்ல.

இந்த அழிவு யுத்தம் ஓய்ந்து நாட்டில் சமாதானமும் சனநாயகமும் சகவாழ்வும் தோன்ற புதிய திசைகளில் நாம் பயணிக்கத் துணிய வேண்டும்.

முல்லைத்தீவு யுத்த சூனிய வலயத்திலிருந்து அப்பாவிப் பொது மக்களை வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறும், மனிதக் கேடயங்களாக மக்களை பாவிப்பதை நிறுத்துமாறும் புலிகள் மீது பாரிய அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியது வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களினது  மிகப்பெரிய பொறுப்பாகும். ஆனால், அவசியமானதும் அவசரமானதுமான இப் பணிகளை தட்டிக் கழித்து நனைத்துச் சுமக்கும் `வீண் அரசியல்` வேலைகளால் புலம் பெயர் தேசங்களில் தமிழர் உழைப்பும் சேமிப்பும் காரியாகி வருவை கண்டு மெத்த மனவருத்தம் கொள்கிறோம். 

‘வெற்றியை காப்பது வீரம், தோல்வியை ஏற்பது மாவீரம்’ எனும் போரறவியலை புலிகள் கருத்திலெடுத்து இந்த யுத்தத்தில் தமது தோல்வியை ஏற்பதும் தமிழர் மரபை காப்பதாக அமையும் என்பதையே இங்கு இடித்துரைக்க விரும்புகிறோம்.

ஒரு கும்பலின் கூட்டுக் கொள்ளைக்கும் காட்டாச்சிக்கும் இடைவிடாது வளங்களைக் குவிக்கும் இந்த ‘ஈழப்’ போர்ப்புயல், தமிழர் வாழ்வில் மனித விழுமியங்களை அடியோடு பிடுங்கியெறிந்து ’ஏக தலைமை’ செயற்கையாக உருவாக்கிவிட்ட மனிதப் பேரவலம். இந்த சண்ட மாருதம் ஓய்ந்து தாயகம் மீளெழுச்சி கொள்ள புகலிடத் தமிழர்கள் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமைகள் நிறைந்த ஒரு புத்தாண்டாக இந்த வருடம் மலர்ந்துள்ளது.

புலம் பெயர் தமிழர்களே! எமது தாயக அரசியலில் புதிய காற்று வீச தயவுசெய்து அனுதியுங்கள்.

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply