வாழ்க்கை சந்தோஷமாக அமைய நகைச்சுவையும், நையாண்டியும் தேவை: பிரதமர் மோடி பேச்சு
வாழ்க்கை, சந்தோஷமாக அமைய நகைச்சுவையும், நையாண்டியும் தேவை என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.‘துக்ளக்’ பத்திரிகையின் 47-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த விழாவில் நான் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால் வேலைப்பளு என்னை அனுமதிக்கவில்லை. ‘துக்ளக்’ பத்திரிகையின் 47-வது ஆண்டு விழாவில் நான் என் அன்பு நண்பர் சோ ராமசாமிக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
சோ மறைவால் நாம் அனைவரும் நமது நண்பரை இழந்திருக்கிறோம். நான் அவரை 40 ஆண்டுகளாக அறிவேன். எனவே அவரது மறைவு, எனக்கு தனிப்பட்ட இழப்பு.
நான் வாழ்வில் சந்தித்த பன்முக திறன் படைத்த ஆற்றலாளர்களில் சோவும் ஒருவர்.
துக்ளக்கையும், சோவையும் ஒருவரை விட்டு ஒருவரைப் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியாவின் அரசியல் வரலாற்றை யாரேனும் எழுத வந்தால், அதில் அவர் சோவையும், அவரது விமர்சனத்தையும் விட்டு விட்டு எழுத முடியாது. அனைத்து பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக துக்ளக்கை அவர் ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். அவர் தூய்மையான, ஊழல் இல்லாத அரசியல் அமைப்பினை உருவாக்குவதற்காக போராடினார். அந்த போராட்டத்தில் அவர் யாரையும் விட்டுவிடவில்லை.
தன்னோடு நீண்டகாலமாக நடித்தவர்களையும்கூட அவர் விமர்சித்தார். அவரோடு நீண்டகாலமாக நட்பு பாராட்டியவர்களையும் விமர்சித்தார். அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்களையும் விமர்சித்தார். அவர் யார் என்று பார்க்கவில்லை. பிரச்சினை என்ன என்றுதான் பார்த்தார். அவருடைய செய்தியின் மையமாக தேசம்தான் இருந்தது.
அவர் யாரையெல்லாம் விமர்சித்தாரோ, அவர்களையும் அவரது நையாண்டி நேசிக்க வைத்தது. அது இறைவன் அவருக்கு தந்த பரிசு.
எனக்கு நினைவில் இருக்கிறது. ஒருமுறை அவர் மீது கோபம் கொண்டவர்கள், சோ மீது முட்டைகளை வீச ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட சோ, “அய்யா, என்னை நீங்கள் ஒரு ஆம்லெட்டாக போட முடியும் என்கிறபோது, எதற்காக பச்சை முட்டைகளை என் மீது வீசுகிறீர்கள்?” என கேட்டார். முட்டைகளை வீசியவர்கள், சிரிக்கத்தொடங்கினார்கள்.
என்னை பொறுத்தமட்டில், சோவின் சிந்தனை, பங்களிப்புகள் தமிழோடும், தமிழ் மக்களோடும் குறுக்கி விடக்கூடியது அல்ல. அவர் இந்தியாவில் பல்வேறு ஊடகவியலாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பல தலைமுறைகளாக ஊக்க சக்தியாக திகழ்ந்தவர்.
துக்ளக் மூலம் சோ ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக திகழ்ந்தார். சோ நையாண்டி கலை, நகைச்சுவையில் வல்லவராக திகழ்ந்தார்.
நம் எல்லோருக்கும் இன்னும் நையாண்டி தேவை. நகைச்சுவை தேவை. நகைச்சுவை, நம் அன்றாட வாழ்வில் சந்தோஷத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது. நகைச்சுவைதான் நல்ல நிவாரணி.
துஷ்பிரயோகத்தின் வலிமையை விட, ஆயுதத்தின் வலிமையை விட புன்னகை வலிமை வாய்ந்தது. சிரிப்பு வலிமை வாய்ந்தது. நகைச்சுவை பாலங்களை உடைப்பதில்லை. பாலங்களை கட்டுகிறது.
இன்றைக்கு பாலங்களை கட்ட வேண்டிய தேவை உள்ளது. மக்களிடையே பாலங்கள் கட்ட வேண்டும். சமூகத்தினர் இடையே பாலங்கள் கட்ட வேண்டும்.
நகைச்சுவை மனிதர்களின் படைப்பாற்றலை வெளியே கொண்டு வருகிறது. இன்றைக்கு ஒரு பேச்சு அல்லது ஒரு நிகழ்ச்சி எத்தனையோ மீம்ஸ்களை (கிண்டல்களை), பார்வர்டுகளை (பலருக்கும் அனுப்புவதை) உருவாக்குகிற ஒரு உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த விழாவில் சோவின் குரலில் ஸ்ரீமத் பகவத் கீதையில் இருந்து சுலோகங்களை சொல்வதை கேட்பதை பாரம்பரியமாக நீங்கள் கொண்டிருப்பீர்கள். சோவுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் நான் ஒரு சுலோகத்தை சொல்லி நிறைவு செய்ய விரும்புகிறேன்.
நிலைப்பேறு என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்வதல்ல. அது, ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நகரக்கூடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேச்சின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி “வணக்கம், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply