கிர்கிஸ்தான் நாட்டில் பயங்கரம் வீடுகள் மீது விழுந்து சரக்கு விமானம் நொறுங்கியது; 37 பேர் பலி

கிர்கிஸ்தான் நாட்டில் சரக்கு விமானம் தரையிறங்கியபோது வீடுகள் மீது விழுந்து நொறுங்கியது. இதில் 37 பேர் பலியாயினர். கடும் பனி மூட்டத்தில் தரையிறங்கியபோது இந்த விபத்து நடந்தது. ஹாங்காங் நகரில் இருந்து துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு நேற்று அதிகாலை துருக்கியின் ஏ.சி.டி. ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மானஸ் விமான நிலையம் வழியாக செல்லவேண்டும். அதில் 4 விமானிகள் இருந்தனர்.

 

அந்த விமானம் நேற்று காலை 7.30 மணி அளவில் பிஷ்கெக் நகரில் உள்ள மானஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானிகளுக்கு ஓடுபாதை சரியாக தெரியவில்லை. இதனால் விமானம் தரையிறங்கிய போதிலும், விமானிகளால் விமானத்தை சரியான திசையில் இயக்க முடியவில்லை.

 

37 பேர் பலி

 

கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் விமான நிலையத்தின் அருகில் டாச்சா-சூ என்ற கிராமத்தை நோக்கி வேகமாக பாய்ந்தது. சுமார் 200 மீட்டர் தூரம்வரை வழியில் இருந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது பயங்கரமாக மோதி நொறுங்கியது. இதில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. பல வீடுகள் தீப்பிடித்தும் கொண்டன.

 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 விமானிகள், டாச்சா-சூ கிராமத்தைச் சேர்ந்த 6 குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என மொத்தம் 37 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

 

விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “விமானம் வீடுகள் மீது மோதியபோது பலர் தங்களுடைய வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். ஒரு வீட்டில் வசித்து வந்த அத்தனை பேரும் பலியாகி விட்டனர்” என்று தெரிவித்தார்.

 

விமான நிலையம் மூடல்

 

இந்த கோர விபத்தை தொடர்ந்து மானஸ் விமான நிலையம் இழுத்து மூடப்பட்டது. மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கின. தீயணைக்கும் வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். ஒரு விமானி மற்றும் கிராமவாசிகள் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.

 

கிர்கிஸ்தான் பிரதமர் சோரூன்பாய் ஜீக்பெகேவ், துணை பிரதமர் முகமத்கலி அபோவ்காசியே மற்றும் மந்திரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

 

சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கிர்கிஸ்தான் ஜனாதிபதி அல்மாஸ்பேக் அதாம்பாவேவ் தனது பயணத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply