ஜல்லிக்கட்டு தடைகளை கடந்து வந்த பாதை: முதல்-அமைச்சர் விளக்கம்

தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு 2006-ம் ஆண்டு முதலே பல்வேறு தடைகளை கடந்து வந்துள்ளது. அவ்வப்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஆணைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுவந்த சூழ்நிலையில், 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப்பிரிவு, ஜல்லிக்கட்டு நிகழ்வு, பழக்கப்பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு, எனவே அவை தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைத்து பிராணிகளுக்கு இழைக்கப்படும் தீங்கினை தடுத்தல் சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் ஆகியவைகளுடன் காளையையும் சேர்க்க வேண்டும் என பரிந்துரைத்தது.

 

இதன் அடிப்படையில், தி.மு.க. அங்கம்வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 11-7-2011 நாளிட்ட அறிவிக்கையில் காளையையும் இந்த பட்டியலில் சேர்த்து அறிவிக்கை வெளியிட்டது. சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசின் அறிவிக்கை மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 7-5-2014 அன்று இறுதி உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த தடை பிறப்பிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009 அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

சுப்ரீம் கோர்ட்டின் இந்த ஆணையை எதிர்த்து அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி 19-5-2014 அன்று தமிழ்நாடு அரசால் மறுஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு 16-11-2016 அன்று தள்ளுபடி செய்துவிட்டது.

 

தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை விடாது நடத்திட வேண்டும் என்ற உன்னத நோக்குடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்று மத்திய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. இதுதொடர்பாக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பினார்.

 

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் காட்சிப்படுத்தப்படும் விலங்காக சேர்க்கப்பட்டுள்ள காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும் என்றும், 1960-ம் ஆண்டைய மிருகவதை தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் விதமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

 

2015-ம் ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதுகுறித்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை மந்திரி தெரிவித்தார். அ.தி.மு.க. எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் இது குறித்து வலியுறுத்தினர். எனினும், ஜல்லிக்கட்டு தொடர்பாக எந்தவித மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், ஜெயலலிதா 22-12-2015 அன்று பிரதமருக்கு கடிதம் மூலம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வகைசெய்யும் அவசர சட்டம் ஒன்றை உடனடியாக கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

ஜெயலலிதாவின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் 7-1-2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கையின்படி, காளைகள் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது. அந்தக் காப்புரையில், சுப்ரீம் கோர்ட்டு தனது 7-5-2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள 5 உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தது. எனினும், ஒருசில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததில், 12-1-2016 அன்று மத்திய அரசின் அறிவிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

 

மத்திய அரசு, தான் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி, அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று ஜெயலலிதா பிரதமரை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக ஜெயலலிதாவாலும், தமிழக அரசாலும், என்னாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. பிரதமரை 19-12-2016 அன்று நேரில் சந்தித்தபோது நான் அளித்த மனுவில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என வற்புறுத்தி இருந்தேன். கடந்த 9-ந் தேதி பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகைசெய்யும் விதமாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

 

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்காத நிலையில், பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் நடைபெறாத நிலை ஏற்பட்டதால், இதுதொடர்பாக அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று நான் பிரதமரை கடந்த 19-ந் தேதி டெல்லியில் சந்தித்து வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். பிரதமர், இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார்.

 

மேலும், இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்படாததை சுட்டிக்காட்டிய பிரதமர் தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார். எனவே, நான் டெல்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொண்டு அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்திட இயலுமா என்பது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் விவாதித்தேன்.

 

அதனடிப்படையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் ஒன்றை கொண்டுவர முடிவெடுக்கப்பட்டு, வரைவு சட்டதிருத்தம் டெல்லியிலேயே தயார் செய்யப்பட்டது. இதை அவசர சட்டமாக பிறப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்த அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பரிந்துரை பெறப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்படவேண்டும் என்பதால் அதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் 20-ந் தேதி இரவு பெறப்பட்டது.

 

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், தமிழகத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதிலும், தன்னிகரில்லா தலைவராக விளங்கிய ஜெயலலிதா ஜல்லிக்கட்டு நடைபெற்றிட முனைந்து மேற்கொண்ட முயற்சிகளே இன்று இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு மூலகாரணம் என்பதை இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

 

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply