இன்று ஜல்லிக்கட்டு போட்டி; அலங்காநல்லூரில் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்
ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த தடை, தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால் நேற்று உடைந்தது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அலங்காநல்லூரில் நடைபெறும் போட்டியை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் ஸ்தம்பித்தது.
இதனால் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கி இந்த ஆண்டு போட்டிகள் நடைபெறும் என்று தமிழக மக்கள் மிகுந்த ஆவலோடு இருந்தனர். ஆனால் இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.
இதனால் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் வெகுண்டு எழுந்தனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், இந்த தடைக்கு காரணமான விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’வை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி அவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர். அவர்களுடைய போராட்டத்துக்கு பல்வேறு தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்தனர். அறவழியில் நடந்த போராட்டத்தால் கடந்த சில நாட்களாக தமிழகமே ஸ்தம்பித்தது.
அவசர சட்டம்
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறுநாள் பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு மோடி, ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த அறிக்கைக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழக அரசு சட்டரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு மாநில அளவில் திருத்தம் ஒன்றை கொண்டு வந்து, அந்த சட்ட திருத்தத்தை அவசர சட்டமாக பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தயாரிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் மாலை ஒப்புதல் அளித்தது.
தடை நீங்கியது
பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும் ஒப்புதல் அளித்தனர்.
தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தின் மூலம், ஜல்லிக்கட்டுக்கு இருந்து வந்த தடை நீக்கப்பட்டு உள்ளது. இது ஒட்டுமொத்த தமிழர்களின் அறவழி போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கனவு நனவானது
ஜல்லிக்கட்டுக்கான தடைகள் தகர்த்தெறியப்பட்டு தமிழர்களின் பண்பாடு காக்கப்படும் என நான் அளித்த வாக்குறுதியின்படி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்புகளால் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு வரவிடாமல் அடைக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியே திறந்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு வீரர்களால் அணைக்கப்படும் நிகழ்வை நடத்திடுவது சாத்தியமாகி உள்ளது என்ற மகிழ்ச்சியை தமிழக மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் உள்ளம் பூரிக்கிறேன்.
மத்திய அரசின் 1960-ம் ஆண்டைய மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு மாநில அரசு திருத்தம் செய்யப்பட்டு அதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதியின் உத்தரவு 20௧௨017 அன்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு பெறப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கான ஒப்புதல் மாநில கவர்னரிடமும் பெறப்பட்டுவிட்டது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என்ற நம் கனவு நனவாகி உள்ளது.
இன்று ஜல்லிக்கட்டு போட்டி
ஜனாதிபதியால் உத்தரவு வழங்கப்பட்ட மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்திற்கான மாநில அரசின் சட்ட திருத்தத்திற்கு கவர்னரின் ஒப்புதல் இன்று (நேற்று) பெறப்பட்டு உள்ளது. எனவே, ஜல்லிக்கட்டுக்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகளின் தளைகள் அவிழ்க்கப்பட்டுவிட்டன. அரசமைப்பு சட்டப்படி இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக சட்ட முன்வடிவு 23௧௨017 அன்று தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதனால் அலங்காநல்லூரிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் 22௧௨017 தேதியே (இன்று) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வை நாளை (இன்று) காலை 10 மணிக்கு நான் நேரில் தொடங்கி வைப்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடைபெறும் மற்ற பகுதிகளில் அந்தந்த மாவட்டங்களை சார்ந்த அமைச்சர்கள் காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பார்கள்.
தமிழ்நாடு எங்கும் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாணாக்கர்களும், இளைய சமுதாயத்தினரும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று இந்நிகழ்வுகளை வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
அமைச்சர்கள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி, கோம்பையன்பட்டி ஆகிய ஊர்களில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் நடைபெறும் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சேலம் மாவட்டம் கூலப்பட்டியில் நடைபெறும் போட்டியை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தொடங்கி வைக்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலத்தில் இன்று நடைபெறும் எருதுவிடும் போட்டியை கலசபாக்கம் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
மதுரை அவனியாபுரத்தில் 25-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply