ஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழ்நாட்டின் இருண்ட நாள்: சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து ஆற்றிய உரை வருமாறு:-
கடந்த டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள், தமிழ்நாட்டின் இருண்ட நாள். நம்மையும், உலகெங்கும் உள்ள தமிழர்களையும் நிலைகுலையச் செய்த நாள். அன்றுதான், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் ஒட்டுமொத்த உருவமாக இருந்து, ஜனநாயகக் கடமைகளைப் பேணிப் பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும் தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்ட, தமிழக மக்களின் இதயங்களில் கொலுவீற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த, ஜெயலலிதா நம்மை விட்டுப் பிரிந்தார்கள்.
அவர் இப்பூவுலகைவிட்டு மறைந்தபோதிலும், நமது இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம்மையெல்லாம் வழி நடத்திக்கொண்டிருக்கிறார்.
தன்னுடைய பேச்சாற்றலால், எழுச்சிமிகு திட்டங்களால், மக்களை அணுகும் பாங்கால், அளப்பரிய திறமையால், ஓய்வறியா உழைப்பால், தனது கட்சியைச் சேர்ந்தவர்களால் மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடைய பேரன்பினையும், போற்றுதலையும், பாராட்டினையும் ஒருங்கே பெற்றவர். தனது தன்னம்பிக்கையினால், ஆளுமைத் திறத்தால், நெஞ்சுறுதியால், துணிச்சலால், எதிரியும் தன்னை மதிக்கத்தக்க அளவிற்கு, பாராட்டத்தக்க அளவிற்கு, புகழத்தக்க அளவிற்கு தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.
அவரைப் பொறுத்தவரையில், சோதனைகளை கடந்து சாதனைகளை படைத்தவர். சவால்களை வெற்றி கண்டு சரித்திரம் படைத்தவர். அவர் தனது வாழ்க்கையில் எதிலுமே, எப்பொழுதுமே, நம்பர் 1 தான். படிப்பில், நாட்டியத்தில், திரையுலகில், அரசியலில் என அனைத்திலும் நம்பர் 1 தான். அனைத்திலும் நம்பர் 1 ஆக இருந்த அவர், அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாகவே ஆக்க விரும்பி, அதை செயல்படுத்தியும் காட்டினார்.
தமிழ்நாட்டின் தவப்பெரும் புதல்வியாய்; ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்ற தத்துவத்தையே வாழ்க்கையாய் அமைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தொண்டாற்றி, இறுதிவரையில் தனக்கென வாழாமல் பிறருக்குரியவராக வாழ்ந்த அவர் யாரும் எதிர்பாராத வகையில் மறைந்தமை குறித்து இப்பேரவை, தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், ஆற்றொணாத் துயரத்தையும் தெரிவிப்பதோடு, தங்கநிகர் தாயின் மறைவால் வருந்தும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு முதலமைச்சர் தனது இரங்கல் உரையில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply