2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பல தரப்பட்ட மானியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்பித்த 2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பல தரப்பட்ட மானியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச்சேர்ந்த ஒன்று முதல் ஐந்து வயதுடைய குழந்தைகளுக்கு திரவப் பால் வழங்குவதற்காக குழந்தை ஒன்றுக்கு மாதக் கொடுப்பனவாக 200 ரூபா வழங்கப்படவுள்ளது. இந்த மானியம் வழங்கும் திட்டம் 2009 ஜனவரி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதற்கான முத்திரையை விநியோகிக்க மகளிர், சிறுவர் அமைச்சும் சமுர்த்தி ஆணையாளர் திணைக்களமும் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்காக 900 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
இதேவேளை பெறுமதி சேர் வரி 15 வீதத்திலிருந்து 12 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பொது பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வாழ்க்கைச் செலவிற்கும் நிவாரணமொன்றாக பெறுமதிசேர் வரி குறைக்கப்படுகிறது. இதனால் உற்பத்திச் செலவு குறைவடைவதனால் வாழ்க்கைச் செலவும் குறைவடையும் என எதிர்பார்க்ப்படுகிறது.
மின்சாரத்தையும், நீரையும் சிக்கனமாகப் பாவிப்பவர்களுக்கு மான்யம் வழங்கும் திட்டமொன்றும் புதிய வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 90 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன் படுத்தும் ஒவ்வொரு பாவனையாளருக்கும் மாதமொன்றுக்கு 30 ரூபா கழிவொன்றும், 15 அலகுகளுக்குக் குறைவாக குழாய் நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பாவனையாளருக்கும் 20 ரூபா மாதாந்தக் கழிவொன்றும் வழங்கப்படவுள்ளது. இதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தித்திட்டத்துக்கு புதிய வரவு செலவுத் திட்டத்தில் 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ரயில்பாதை, நெடுஞ்சாலைகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், அரசஅலுவலகங்கள் மறுசீரமைத்து நவீனமயப்படுத்தப்படவுள்ளன.
ஓய்வூதியம் பெறுகின்றவர்களின் வாழக்கைச்செலவு கொடுப்பனவு 560 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது. அதன்படி அக்கொடுப்பனவு 1,440 ரூபாவிலிருந்து 2,000 ரூபாவாக உயர்கிறது.
இதன் மூலம் ஐந்து இலட்சம் பேருக்கு நிவாரணம் கிட்டுகிறது. ஓய்வ+தியம் உரித்தற்ற அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் உபகாரப் படியும் 500 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இவற்றுக்காக 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply