கூட்டமைப்பினர் புதுடில்லியில் இருநாள் சந்திப்பு
`புலிகளுக்கு பின்` இலங்கை இனப்பிரச்சினைக்கு சாத்தியமான அரசியல் தீர்வு குறித்தும், தற்போதைய உடனடித் தேவையான முல்லைத்தீவு யுத்த சூனியப் பிரதேச மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிவகைகளை கண்டறிவது குறித்தும் ஆராய இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனின் அழைப்பின் பேரில் இன்று புதுடில்லிக்கு செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் குழுவில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இன்றும் நாளையும் புதுடில்லியில் தங்கியிருக்கும் இக்குழுவினர் சிவ்சங்கர் மேனன் உட்பட மற்றும் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்துவர் என்று கொழும்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இக்குழுவினர் யார் யாரைச் சந்தித்து பேச உள்ளனர் என்ற விவரம் நேற்று இரவு வரை முடிவு செய்யப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பேச்சுக்களின் போது நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியத் தலைவர்களிடம் கூட்டமைப்புக்குழு வலியுறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply