எப்பொழுது எதை செய்ய வேண்டும் என எனக்கு நன்றாக தெரியும் : மனோ கணேசன்

இந்த நல்லாட்சியின் கட்சிகளை எனக்கு மிக நன்றாக தெரியும். இந்த அரசிலிருந்து, எப்போது உள்ளே வர, எப்போது வெளியே போக வேண்டும், எப்போது அதிர்ச்சி கொடுக்க வேண்டும், எப்போது சிரிக்க, முறைக்க வேண்டும் என்பவை எனக்கு மிக நன்றாக தெரியும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் தனியார் தொலைக்காட்சியொன்றின் செய்தியறிக்கையின் போது நடராஜா ரவிராஜின் வழக்கு தீர்ப்பின் காரணமாக அமைச்சர் மனோ கணேசனை அரசாங்கத்திலிருந்து வெளியேறும்படி கூறியுள்ளதாக தெரிவித்தார்.

வடமாகாணசபை உறுப்பினர் கூறியதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ரவிராஜின் வழக்கு தீர்ப்பு தொடர்பில் நான் ஏற்கனவே என் கடும் அதிருப்தி நிலைப்பாட்டை பகிரங்கமாக கூறியுள்ளேன். ஆனால், அரசில் இருந்து வெளியேற இந்த ஒரு காரணம் மட்டும் போதுமானதல்ல.

நாட்டின் அனைத்து பிரச்சினைகளையும் வடகிழக்கின் கட்சி அரசியல் பயணத்துடன் மாத்திரம் கொண்டு சென்று முடிச்சு போட வேண்டாம் என்பதையும், இந்நாட்டில் தமிழ் மக்கள் நாடு முழுக்க வாழ்கிறார்கள் என்பதையும், இது ஒரு நாடு என்பதையும் நாம் அனைவரும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதையும் இந்த இளைஞருக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.

குறுகிய குறுநில பார்வைகள் தமிழ் மக்கள் பெருந்திரளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஒருபோதும் பெற்று தராது.

இந்த நல்லாட்சி தொடர்பாக எத்தணை முரண்பாடுகள் இன்று இருந்தாலும், அது இந்த அரசை உடைத்தெறிந்து மீண்டும், மஹிந்த ராஜபக்ச வர இடம் ஏற்படுத்துவதை நியாயப்படுத்தாது.

இதை சர்வதேசமும் இன்று ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சர்வதேச சமூகத்தின் நாடித்துடிப்பு எனக்கு மிக நன்றாகவே தெரியும். சர்வதேசத்தின் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொண்டு, இருக்கின்ற ஒரேயொரு கொலுக்கொம்பையும் இழக்க நான் தயாரில்லை.

இந்த வடமாகாணசபை உறுப்பினரை எனக்கு தெரியாவிட்டாலும், அவர் அங்கம் வகிக்கும் மாகாணசபையையும், அதன் முதல்வரையும் எனக்கு நன்கு தெரியும்.

பல்லாண்டுகளுக்கு முன் அந்த மகாணசபை தேர்தலின் போது வடக்கு வந்து முகாமிட்டு, தங்கியிருந்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வடமாகாணசபை உருவாக்கத்தில் பங்களித்தவன், நான்.

என் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லும் இவர்களிடம், தம் ஒட்டுமொத்த எதிர்ப்பை எடுத்துக்காட்டும் முகமாக முதலில் தமது வடமாகாணசபையையும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யுங்கள் என நான் சொல்ல போவதில்லை.

இவரது கட்சியான தமிழரசு கட்சியின் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும், இலங்கை பாராளுமன்றத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யுங்கள் என நான் சொல்ல போவதில்லை.

இலங்கை பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவர் பதவியையும், கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தரினது எதிர்கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யும்படி கூட நான் சொல்ல போவதில்லை.

எடுத்தேன், கவிழ்த்தேன் என அரசியல் செய்யாமல் முதிர்ச்சியுடன் பயணியுங்கள். ஜனரஞ்சகமானது எனக்கருதி, உணர்ச்சிவசப்பட்டு கருத்துகளை கூறாதீர்கள்.

அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து தொலைக்காதீர்கள். வரலாற்றிலிருந்து பாடம் படியுங்கள். இன்று எம்மிடம் எஞ்சியுள்ளது என்ன என்பதைபற்றிய சரியான நேர்மையான கணக்கெடுப்பை செய்யுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உரிய வேளையில், உரிய முடிவுகளை, உரிய முறைகளில் கூட்டாகவே நாம் எடுப்போம். அதற்கான காலம் வரும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply