விசா தடைக்கு எதிராக செயல்பட்ட அமெரிக்க அட்டார்னி ஜெனரல் நீக்கம் டிரம்ப் அதிரடி நடவடிக்கை

விசா தடைக்கு எதிராக செயல்பட்ட அமெரிக்க அட்டார்னி ஜெனரலை ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக நீக்கி விட்டார்.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 27-ந்தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், உலகின் எந்தவொரு நாட்டில் இருந்தும் வரும் அகதிகள், அமெரிக்காவில் நுழைவதற்கு 4 மாதம் தடை விதிக்கப்பட்டிருப்பதும், சிரியா அகதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கிற வரையில் அமெரிக்கா வர முடியாது என்பதும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தப்படும் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

 

இந்த உத்தரவுகள், நிர்வாக உத்தரவுகள் என்பதால் அந்த நாட்டின் பாராளுமன்றம் ஏற்று ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு அந்த நாட்டின் அரசியல் சட்டம் வழிவகுத்துள்ளது.

 

எதிராக அட்டார்னி ஜெனரல் கருத்து

 

அதே நேரத்தில் இந்த உத்தரவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் பெருமளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கோர்ட்டுகளில் வழக்குகளும் தொடரப்படுகின்றன.

 

இதனால் டிரம்பின் உத்தரவுகள், அரசியல் சட்டப்படியும், சட்டத்தின்படியும் செல்லத்தக்கவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இந்த தடை உத்தரவுகளுக்கு எதிராக அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரல் சேலி யேட்ஸ் கருத்து தெரிவித்தார். விசா தடை உள்ளிட்ட அந்த உத்தரவுகள் சட்டப்பூர்வமானவைதானா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

 

அதுமட்டுமின்றி ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுகள் சட்டப்பூர்வமானவை என்று தன்னால் ஏற்க முடியவில்லை என்றும் கூறினார்.

 

இதுபற்றி அவர் கூறுகையில், “நான் அட்டார்னி ஜெனரலாக பதவி வகிக்கிற வரையில், இந்த நிர்வாக உத்தரவுகளுக்கு எதிரான வழக்குகளில் அவை சட்டப்பூர்வமானவை என அரசுக்கு ஆதரவாக அரசு வக்கீல்கள் வாதாட மாட்டார்கள்” என குறிப்பிட்டார்.

 

இது டிரம்ப் அரசுக்கு பெருத்த தர்ம சங்கடமாக அமைந்தது.

 

அதிரடி நீக்கம்

 

இதுபற்றி ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள நிர்வாக உத்தரவுகளை அமல்படுத்த மறுத்து, நீதித்துறைக்கு சேலி யேட்ஸ் துரோகம் செய்து விட்டார்” என கூறியது.

 

மேலும், அவரை அதிரடியாக அட்டார்னி ஜெனரல் பதவியில் இருந்து நீக்கி ஜனாதிபதி டிரம்ப் நேற்று நடவடிக்கை எடுத்தார்.

 

தற்காலிகமாக புதிய அட்டார்னி ஜெனரலாக டானா போயெண்டே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வெர்ஜீனியா கிழக்கு மாவட்ட அட்டார்னி ஜெனரலாக பணியாற்றி வந்தவர் ஆவார்.

 

இவர் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவை ஏற்று செயல்படவேண்டும் என்று நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply