தகவல் அறியும் சட்டமூலத்தால் வினைத்திறன்மிக்க அரசசேவை : கயந்த கருணாதிலக

நாம் தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, குறுகியதொரு காலத்திலேயே நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளோம். அரசாங்கமொன்றின் ஆட்சிக் காலம் நிறைவடைகின்றபோதே இவ்வாறான விடயங்களில் கைவைப்பர். நாம் நல்லாட்சியின் அடிப்படையில் பயணிப்பதால் இவ்விடயத்தில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் தேவையுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அவருடன் மேற்கொண்ட முழுமையான நேர்காணல்:

கேள்வி: தகவல் அறியும் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயன்முறைகள் தயார் நிலையில் உள்ளதா?

பதில்: தகவல் அறியும் சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சட்டமூலமாக நிறை வேற்றப்பட்டது. அந்த சட்டமூலத்தில், சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாத காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற விடயமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மாத காலம் பூர்த்தியடைகின்றது. நாம் பெப்ரவரி 3ஆம் திகதி சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளோம். நடைமுறையில் உள்ள 51 அமைச்சுகளில் 50 அமைச்சுகளுக்கான தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மிகுதி அதிகாரியும் விரைவில் நியமிக்கப்படவுள்ளார். மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். மாவட்ட ரீதியிலும், தகவல் அதிகாரிகளுக்குமான மேலதிக பயிற்சிகளை வழங்கி வருகின்றோம். பெப்ரவரி மாதம் நான்காம் திகதியிலிருந்து தகவல் அறியும் சட்டமூலத்தை செயற்படுத்தும் வாய்ப்புள்ளது.

கேள்வி: தகவல் அறியும் சட்டமூலத்துக்கு அனைத்துவிதமான அரச அலுவல்களும் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்படுமா?

பதில்: அனைத்து அரச நிறுவனங்களும் தகவல் அறியும் சட்டமூலத்துக்கு உட்படுத்தப்படும். தற்போது அரச நிறுவனங்களில் தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்படுகின்றனர். அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தகவல் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். அந்த அனைத்து அரச நிறுவனங்களையும் வர்த்தமானியில் உள்ளடக்குவோம். மஹிந்த கம்மன்பில தலைமையிலான தகவல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுடனும் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். உதாரணமாக அரச நிறுவனமொன்றிலிருந்து தகவலொன்றைப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் ஒருவர் கட்டணங்களை செலுத்துவது எவ்வாறு? பக்கங்களின் அடிப்படையில் எவ்வளவு? போன்ற விடயங்களை மஹிந்த கம்மன்பில தலைமையிலான குழுவோடு கலந்துரையாடி வருகின்றோம். மாத இறுதிக்குள் மேற்படி விடயங்களில் இறுதி முடிவுக்கு வந்துவிடுவோம்?

கேள்வி: பெப்ரவரி 4ஆம் திகதி சட்டமூலத்தை அமுல்படுத்த முடியுமா? அதிகாரிகளுக்கான பயிற்சிகள் நிறைவடைந்துள்ளதா?

பதில்: சட்டமூலத்தை தயாரிக்கும் போதும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் காலம் தொட்டே நாம் பயிற்சிகளையும், முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டுவந்தோம். ஆரம்பத்திலிருந்தே துறைசார் அமைச்சர்களையும் அறிவுறுத்தி வேலைகளை ஆரம்பித்தோம். இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும், இந்த சட்டமூலத்தை ஆதரிக்கும் உறுப்பினர்களின் சட்டமூல தெளிவுபடுத்தல் கலந்துரையாடல்களில் ஆர்வமாக கலந்துகொண்டனர். சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர முன்னரே இந்த வேலைகள் நடைபெற்றன. சந்தேகங்கள், தெளிவின்மைகள் இருந்த இடங்களை தெளிவுபடுத்தப்பட்டபோது பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களினதும் ஆதரவோடு சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது. அதேபோன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில் ஆறு மாதங்களில் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்புவாய்ந்த பணியும் எனது அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டது. எமது அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக பொறுப்புகளால் அமைச்சின் வேலைகளும் அதிகமாகியுள்ளன.

கேள்வி: பொது மக்கள் அரச நிறுவனங்களை கேள்விக்குட்படுத்தும் போது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?

பதில்: ஆம், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விடயத்தில் அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட தயாராக உள்ளனர். மக்களும் இதற்கு பழக்கமடைய சில காலம் செல்லும். ஆரம்பத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும், காலப்போக்கில் தகவல் அறியும் சட்டமூலத்தில் மக்கள் உரிமை பேணும் எவ்வளவு விடயங்கள் உள்ளன என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

கேள்வி: தகவல் அறியும் சட்டமூலத்தால் அரச நிறுவனங்களில் புதிய கலாசாரமொன்று ஏற்பட வாய்ப்புள்ளதா?

பதில்: அரச அலுவலகங்களில் தகவல் அறியும் சட்டமூலமென்பது ஒரு புதிய விடயமாகும். பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்கும், ஊழல்கள் இல்லாதொழிவதற்கும் இது பெரிதும் உதவக்கூடியது. தகவல் அறியும் சட்டமூலத்தால் அரசின் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மை மிக்கதாக மாறுகின்றன. பொதுவாக அரசாங்கமொன்றின் பதவிக் காலம் முடியும்போதே இவ்வாறான சட்டமூலமொன்றை நிறைவேற்றுகின்றனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்களேயாகின்றபோது அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை புலனாகின்றது. எனினும் பங்களாதேசத்தில் தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வருவதற்கு ஐந்து வருடங்கள் சென்றன. நாம் தகவல் அறியும் சட்டமூலம்
நிறைவேற்றப்பட்டு, குறுகியதொரு காலத் திலேயே நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளோம்.
அரசாங்கமொன்றின் ஆட்சிக் காலம் நிறைவடைகின்றபோதே இவ்வாறான விடயங்களில் கைவைப்பர். எனினும் ஒழுங்கான, நல்லாட்சியொன்றின் அடிப்படையில் பயணிப்பதனாலேயே நாம் இவ்விடயத்தில் வெளிப்படைத் தன்மையாகச் செயற்படும் தேவை எமக்குள்ளது.

கேள்வி: தகவல் அறியும் உரிமையும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வழங்கப்படும் ஒன்றா?

பதில்: ஒருபோதும் இல்லை. அவ்வாறான எந்த நோக்கத்திலும் இந்த உரிமை வழங்கப்படுவதில்லை. ஜீ.எஸ்.பி வரிச் சலுகைக்கும் தகவல் அறியும் சட்டமூலத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

கேள்வி: தகவல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் செயற்றிட்டத்தில் வெற்றிகண்டுள்ளீரா?

பதில்: தகவல் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் பணிகள் உரிய காலத்தில் ஆரம்பமானது. இதுவரையில் 40,000க்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சியளித்துள்ளோம். தகவல் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் செயற்திட்டம் தொடர்கின்றது.

கேள்வி: இவ்விடயத்தில் பொது மக்களை அறிவூட்டும் வகையில் எவ்வாறான திட்டங்கள் உள்ளன?

பதில்: சகல ஊடகங்களையும் உரிய விதத்தில் பயன்படுத்தி பொது மக்களை தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக அறிவூட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளோம். இவ்விடயத்தில் ஊடகங்களின் பணி மிக முக்கியமானதாகும். ஊடகங்களினூடாக இவ்விடயம் மக்களை சென்றடையும்போதே தகவல் அறியும் சட்டமூலத்தின் உண்மையான பயன்பாடுகளை மக்கள் அறிந்துகொள்வார்கள்.

கேள்வி: இச்சட்டமூலம் நாட்டில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும்?

பதில்: நாட்டில் உள்ள ஊழல்கள் பெருமளவில் குறைவடைவதற்கான வாய்ப்பு இந்த உரிமை மூலம் ஏற்படுத்தப்படும். பொறுப்புணர்வுடன், வினைத்திறன்மிக்க அரச சேவையொன்றை இதன் மூலம் உறுதிசெய்யலாம். தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படும்போது அரசாங்கமும் கண்ணாடி குவழையொன்றினுள் வந்ததுபோலாகின்றது.

கேள்வி: தகவல்களைப் பெற்றுக்கொள்ள எவ்வளவு காலம் எடுக்கும்?

பதில்: தகவல் அறியும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 14 நாட்களுக்குள் தகவல்கள் வழங்கப்படவேண்டும்.

கேள்வி: இதனை செயற்படுத்த அரசாங்க நிதியொதுக்கீடுகளுக்கப்பால் வேறேதும் நிதியுதவிகள் பெறப்பட்டதா?

பதில்: தகவல் அறியும் மக்கள் உரிமையை செயற்படுத்தும்போது பல்வேறுபட்ட சர்வதேச அமைப்புகளின் உதவிகள் கிடைக்கின்றன. இந்த விடயத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரபலப்படுத்தும் விடயத்தில் யூ.எஸ்.எய்ட் நிறுவனம் எமக்கு பல்வேறு வகையிலும் உதவியது. மேலும் பல்வேறு உதவிகளும் எதிர்வரும் காலங்களில் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: தகவல் அறியும் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தும் இந்த பயணத்தில் நீர் எதிர்கொண்ட சவால்கள் ஏதும் உண்டா?

பதில்: இதனை நடைமுறைப்படுத்தும் பணியில் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ளவில்லை.

கேள்வி :தகவல் வழங்குவதில் இருந்து விதிவிலக்களிக்கப்பட்ட விடயங்கள் அதிகமாக இல்லையா?

பதில்: தகவல் வழங்க முடியுமான, வழங்க முடியாத விடயங்கள் சட்டமூலத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பொது மக்கள் கேட்கும் தகவல்களில் அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் விடயங்களின் தகவல்கள் வெளியிடப்படாது. மருத்துவ அறிக்கைகள் மற்றும் தனியார் விடயங்கள் வெளியிடப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் தகவல் அறியும் சட்டமூலத்தில் வழங்கப்படாத முக்கியமான உரிமைகளும் இங்கு வழங்கப்பட்டுள்ளன. தகவல்களை வழங்காமல் இருப்பதைவிட வழங்குவதில் நன்மைகள் அதிகமாக இருக்கும்போதும் தகவல்கள் வழங்கப்படும்.

-ஆதில் அலி சப்ரி-

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply