புலிகள் மீள் உருவாக்கம் என்பது மஹிந்தவின் கற்பனை கதை

விடுதலைப்புலிகள் மீள உருவாகிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது வெறும் கற்பனைக் கதை. அண்மைக் காலத்தில் சுமந்திரனுக்கு எதிரான தாக்குதலை முன்னாள் விடுதலைப் புலிகள் நடாத்தவிருந்ததாகக் கூறியிருப்பதும் அவ்வாறானதொரு கற்பனைக் கதையே என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

கடந்த செவ்வாய்க்கிழமை அநுராதபுர விகாரைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது விடுதலைப் புலிகள் மீள உருவாகுவதாகத் தெரிவித்த கருத்துத் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

 

இவ்வாறு தாக்குதல் நடாத்துவதற்குச் சதித் திட்டம் தீட்டியதாகக் கைது செய்யப்பட்ட நால்வரும் கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது கஞ்சா வைத்திருந்ததாகவும், கண்ணிவெடி வைத்திருந்ததாகவுமே அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவ்வாறு உண்மையாக சுமந்திரனைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தால் அந்தக் குற்றச்சாட்டு ஏன் பின்னர் நிரூபிக்கப்படவில்லை? இராணுவத் தளபதியும் அவ்வாறு ஏதும் இடம்பெற்றிருக்கவில்லை என்றே கூறுகின்றார்.

 

விடுதலைப் புலிகளை அழித்த காரணத்தால் சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்தும் தன்னையொரு ஹீரோவாகக் காட்டிக் கொள்ளவே மகிந்த விடுதலைப் புலிகள் மீள உருவாகிறார்கள் என வதந்தி பரப்பி வருகிறார். தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசுவதன் மூலம் தன்னுடைய அரசியல் பலத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதே மகிந்தவின் நோக்கம்.

 

ஆகவே, தன்னுடைய சொந்த அரசியல் நலன்களுக்காக எமது இளைஞர், யுவதிகளை அவர் பகடைக் காய்களாகப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.

 

சிங்கள மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முனையும் மகிந்தவின் சூழ்ச்சிகளுக்கு யாரும் துணை போகக் கூடாது எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply