இலங்கையில் தமிழர்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்த சிறிசேனா உறுதி

இலங்கை சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய அதிபர் சிறிசேனா, நாட்டில் வாழும் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.

இலங்கையில் உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை அதிபர் சிறிசேனா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராணுவ பயன்பாட்டுக்காக கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலங்களை திருப்பி அளிக்கவும், முன்னாள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் சிலரை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழர்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்ற வழிசெய்யும் வகையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் பணிகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு உள்ளது.

 

 

அதிபர் சிறிசேனாவின் இந்த நடவடிக்கையை முன்னாள் அதிபர் ராஜபக்சேவும், அவரது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழர்களை திருப்திபடுத்தும் செயலில் அரசு இறங்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர்கள், இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியிருந்தனர்.

 

ஆனால் இந்த விமர்சனங்களை அதிபர் சிறிசேனா நிராகரித்து உள்ளார். இவை அனைத்தும் குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்திலானது என்று அவர் கடுமையாக குற்றம் சாட்டினார்.

 

தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்த 69-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பாக கூறுகையில், ‘இலங்கையில் சிறுபான்மை தமிழர்களுடன் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. சில சந்தர்ப்பவாதிகளின் குறுக்கீடுகள் இருந்த போதிலும், இந்த உறுதிக்காக நாங்கள் தீர்மானமாக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளோம். அறிவு மற்றும் புதுமை அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி அரசு செயல்படும்’ என்றார்.

 

இதற்கிடையே இலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களை சில தமிழ் அமைப்புகள் புறக்கணித்து உள்ளன. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நேற்று அவை தர்ணாவில் ஈடுபட்டன. இந்த போராட்டத்துக்கு வடக்கு மாகாண கவுன்சிலரான சிவாஜிலிங்கம் தலைமை தாங்கினார்.

 

போராட்டம் குறித்து அவர் கூறுகையில், ‘இலங்கை சுதந்திர தினம் எங்களுக்கு கருப்பு தினமாகும். தமிழ் சமூகம் இன்று துயரத்தில் இருக்கிறது. எங்கள் நிலப்பிரச்சினைகள், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையையே நாங்கள் விரும்புகிறோம்’ என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply