இந்தியாவை அச்சுறுத்த 1,000 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சீன தயாரிப்பு
சீனாவில் தற்போது இளவேனிற்காலம் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பருவ காலத்தையும் சீனா வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி இளவேனிற்கால விழா தலைநகர் பெய்ஜிங் நகரில் அண்மையில் நடந்தது.அப்போது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தயாரித்த பல்வேறு புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. அதில் சீன ராணுவத்தால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் படைப் பிரிவின் வீடியோ காட்சி ஒன்றும் இடம் பெற்றது.
அதில் சீன ராணுவம் தயாரித்த 2 அதிநவீன டி.எப்-16 ரக ஏவுகணைகளும், அவற்றை செலுத்துவதற்கான ஏவு ஊர்திகளும் இடம் பிடித்து இருந்தன. தவிர இவற்றை செலுத்துவதற்கு உரிய பயிற்சிகளிலும் சீன ராணுவத்தினர் ஈடுபட்டு வருவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது.
இந்த ரக ஏவுகணைகள் 1,000 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக சென்று துல்லியமாக இலக்கை தாக்கும் வல்லமை கொண்டவை ஆகும். இந்த ஏவுகணைகளால் சில டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் சுமந்து செல்ல முடியும்.
டி.எப். 16 ஏவுகணை தன்னிடம் இருப்பதாக சீனா 2015-ம் ஆண்டு முதன் முதலாக அறிவித்தது. அதன் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்ப வடிவம்தான் தற்போது பொதுமக்களிடம் வீடியோ காட்சியாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
சீனாவின் இந்த புதிய ரக ஏவுகணையால் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக சீனா தனது ராணுவத் தயாரிப்பு மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வது இல்லை. அவற்றை மிக ரகசியமாக பாதுகாத்து வைத்து இருக்கும். வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்த பிறகே வெளிப்படையாக அறிவிக்கும்.
சமீப காலமாக தென் சீனக் கடல் எல்லையில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் எதிர்ப்பை சீன ராணுவம் சந்தித்து வருகிறது.
இதனால் தன்னிடம் உள்ள ராணுவ வலிமையை வெளிக் காட்டுவதற்காக தற்போது அதி நவீன டி.எப். 16 ரக ஏவுகணைகள் வைத்திருப்பதை சீனா அறிவித்து இருப்பதாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply