ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும்: பி.எச். பாண்டியன் வலியுறுத்தல்
அ.தி.மு.க. பிரமுகரும் முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன் இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணம் அடைந்த டிசம்பர் 5-ம் தேதி வரையில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், அதன்பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் நடந்த மாற்றங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டதும், மருத்துவமனையில் இருந்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் ராஜாஜி ஹாலுக்கு சென்றோம். அங்கே, அம்மா அவர்களால் கட்சிவிரோத நடவடிக்கைக்காக நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர் எல்லாம் சுற்றி நின்றிருந்தனர்.
இதைப் பார்த்ததும் எங்களுக்கு அதிர்ச்சி. சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாக நீக்கியபிறகு சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு சேர்ந்துவிட்டார். அந்த கடிதத்தில், தனது சொந்தக்காரர்கள் திட்டமிட்டு செயல்படுவதாக கூறிய சசிகலா, அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமும் இல்லை என்று கூறி, சாதாரண உறுப்பினராக வந்தவர்.
ஆனால், அம்மா அவர்கள் மறைந்து 20 நாட்கள்கூட ஆகாதநிலையில், எல்லோரையும் பொது இடத்தில் பேச வைத்து, டி.வி.யில் பேட்டி கொடுக்கச் செய்து, ‘உங்களுக்கு மட்டும்தான் தகுதி, நீங்கள் ஒருவர்தான் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்’ என்றும் சொல்ல வைத்துள்ளார்கள்.
அப்போதுதான் எனக்கு ஒன்று புலப்பட்டது. மும்பையில், ஒரு பெரிய பணக்கார அம்மாவை ஒருவர் மும்பையில் இருந்து டெல்லி வரை ரெயிலில் பயணம் செய்யவைத்து திட்டமிட்டு கொன்றது நினைவுக்கு வந்தது.
சாதாரணமாக ஒரு வீட்டில் ஒரு நபர் இறந்துவிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்களைத்தான் காவல்துறை விசாரிக்கும். அந்த வகையில், முதலமைச்சர் அம்மா அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளான, செப்டம்பர் 22-ம் தேதி அவரது வீட்டில் எத்தனை பேர் இருந்தார்கள்? வீட்டில் இருந்த சொந்தங்கள் யார்? யார்? இதைப்பற்றி எல்லாம் விசாரிக்க வேண்டாமா?
தமிழகத்தில் கடந்த 2 நாளில் நடந்த நிகழ்வுகள் என் மவுனத்தை கலையச் செய்துவிட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கும் முதலமைச்சர் பதவியை ஏற்பதற்கும் சசிகலா தகுதி அற்றவர்.
இவ்வாறு பி.எச். பாண்டியன் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply