அமெரிக்கத் தூதுவர் விடுதலைப் புலித் தலைவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொள்கின்றார்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களை பாதுகாக்கும் முயற்சியொன்றை மேற்கொண்டு வருவதாக பிரபல ஆங்கில இணைய தளங்களில் ஒன்றான ஏசியன் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.நோர்வே மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களை பாதுகாப்பாக நாட்டைவிட்டு வெளியேற்றத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் பாதுகாப்பான வழியில் சரணடைவதற்கும், தப்பித்துச் செல்வதற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது புதல்வர் சார்ள்ஸ் அன்ரனி மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை மட்டும் ஐக்கிய நாடுகளின் உதவியுடன் வேறு நாடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க ரொபர்ட் ஓ பிளெக் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.யுத்த நிறுத்த அறிவிப்பின் மூலம் விடுதலைப் புலி தலைவர்கள் தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும், அதன் காரணமாகவே அமெரிக்கத் தூதுவர் யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து முனைப்பு காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன், அமெரிக்கத் தூதுவர் அடிக்கடி சந்திப்புக்களை நிகழ்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply