ரத்ன தேரர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரருக்கு சுயாதீனமாக செயற்பட அதிகாரமில்லை. அவர் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஹெல உருமய செயலாளர் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பில் மத்திய குழு ஆராய்ந்து ரத்ன தேரருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய பட்டியல் எம்.பி. பதவி அவருக்குரியதல்ல. அது ஹெல உருமயவுக்காகவே வழங்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
ஊடக முக்கியஸ்தர்களுடன் லோட்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று(16) நடந்த கலந்துரையாடலின் போது ரத்ன தேரர் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் வினவப்பட்டது.
2015 பொதுத் தேர்தலின் போது நாம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தோம். அதன்படி இரு தேசிய பட்டியல் வழங்க இணக்கம் காணப்பட்டது. 13 தேசியப்பட்டியல் எம்.பிகளே ஐ. தே. மு. வுக்கு கிடைத்ததால் ஒரு தேசிய பட்டியலே எமது கட்சிக்கு கிடைத்தது. அதற்கு ரத்ன தேரரை நியமித்தாலும் அவர் கட்சி முடிவுக்கு மாற்றமாக நடந்தார். முதலில் அவரை தேர்தலில் போட்டியிட கோரியிருந்தோம். ஆனால் அதற்கு அவர் இணங்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னர் அவர் பெசில் ராஜபக்ஷவை ரகசியமாக சந்தித்துள்ளார். கட்சி நிலைப்பாட்டுக்கு மாற்றமாக தமக்கு தேவையானவாறே செயற்பட்டார்.
2015 பொதுத் தேர்தலுக்குப் பின் ஆகஸ்ட் 21 ஆம் திகதி மத்திய குழு கூடியது. இதில் கலந்துகொண்ட ரத்ன தேரர், அரச கொள்கை படி செயற்படுவதாக உறுதியளித்தார். ஆனால் தற்பொழுது சுயாதீனமாக செயற்படப் போவதாக கூறுகிறார். அவருக்கு சுயாதீனமாக செயற்பட உரிமையில்லை. அவர் எம்.பி. பதவியை விட்டும் விலகியே சுயாதீனமாக செயற்பட முடியும். இது தொடர்பில் அவருக்கு கட்சியினூடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
2010 தேர்தலின் போது எமக்கு கிடைக்க வேண்டிய தேசியப் பட்டியல் எம்.பி. பதவிக்கு நாம் பிரேரித்த நபருக்கு பதிலாக மஹிந்த ராஜபக்ஷ வேறு ஒருவரை நியமித்தார். ஓமல்ப தேரரை நாம் பிரேரித்தோம். ஆனால் எல்லாவல தேரரே நியமிக்கப்பட்டார். அவரை கட்சி தலைமையிலிருந்து நீக்கினோம்.
அதனுடன் அவரின் அரசியல் வாழ்வு முடிவடைந்தது. அத்தகைய நிலை இன்று எழாத போதும் ரத்ன தேரர் கடந்த ஆட்சியிலும் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை விமர்சித்திருந்தார். அவ்வாறு செய்வதானால் கட்சியின் முன் அனுமதி பெற வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply