தமிழகத்தில் இன்று பலப்பரீட்சை
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்தும் முதலமைச்சராக இருப்பதற்கான பலப்பரீட்சை இன்று நடைபெறுகிறது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கோரியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர ராவ் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்குமாறு அழைத்ததுடன், நேற்றுமுன்தினம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எனினும், 15 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனை வழங்கப்பட்டது.
இதற்கமைய இன்றையதினம் சட்டமன்றத்தின் விசேட அமர்வு இடம்பெறவுள்ளதுடன், எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சையில் இன்று இறங்குகின்றார். இன்று முற்பகல் 11.30 மணிக்கு சட்டமன்றம் கூடுகிறது. ஆளுநரிடம் கையளித்த கடிதத்தில் 125 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக பழனிச்சாமி குறிப்பிட்டிருந்தார்.
தமிழக சட்டசபையில் உள்ள 233 ஆசனங்களில் அ.தி.மு.கவுக்கு 135 ஆசனங்கள் இருக்கின்றன. இதில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்ச்செல்வத்துக்கு ஆதரவாக மாறியிருப்பதால் 125 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக எடப்பாடி குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பதாயின் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். தற்பொழுது இருக்கும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடிக்கு உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்குப் பின்னாலிருக்கும் சசிகலா தரப்பினர் கடந்த 10 நாட்களாக 100ற்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை கூவத்தூர் விடுதியில் அடைத்துவைத்தே ஆதரவுக் கடிதத்தில் ஒப்பம் வாங்கியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் இன்று நடைபெறக்கூடிய இரகசிய ஆதரவுக் கோரலில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்றபோதும் கூவத்தூரில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பழனிச்சாமிக்கு ஆதரவு வழங்கப்போவதில்லையெனக் கூறியதாலேயே அங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செய்திகள் உண்மையாயின் இன்றையதினம் நடைபெறவிருக்கும் பலப்பரீட்சையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போகலாம். மறுபக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தி.மு.கவின் பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பலப்பரீட்சையில் தி.மு.க எவருக்கு ஆதரவாகவும் வாக்களிக்காது என்றாலும் பழனிச்சாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என அவர் கூறியுள்ளார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது போகும் பட்சத்தில் பன்னீர்ச்செல்வத்தை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அழைப்புவிடுக்கலாம்.
இரு தரப்பினருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவர முடியும்.
இன்றையதினம் எவ்வாறு வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறித்து அரச அதிகாரியொருவர் விளக்கமளிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிவார். அதன் மீது, சட்டசபை கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு கேட்டால், வாய்ப்பு அளிக்கப்படும்.
பின், வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு வரிசையாக வாக்கெடுப்பு நடத்தப்படும். தீர்மானத்தை ஆதரிப்போரை எழுந்து நிற்கும்படி, சபாநாயகர் உத்தரவிடுவார் இவ்விதம் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுஇவ்விதமிருக்க, ஆட்சியேற்ற முதலாவது நாளே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசாங்கம் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வத்தையும் அவருக்கு ஆதரவானர்களுக்கு எதிரான நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
முதலமைச்சர் என்ற ரீதியில் பன்னீர்ச்செல்வத்துக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வீட்டை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது. அது மாத்திரமன்றி சசிகலா ஆதரவு தொகுதிகளில் பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளர்கள் விழிப்புணர்வுப் பேரணியொன்றை நேற்றுக் காலை ஆரம்பித்தனர். இப்பேரணி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே பொலிஸார் அவர்களைக் கைதுசெய்தனர்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டமன்றத்தில் ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், ஆளுங்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதால் தலைமைச் செயலகத்தில் போலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளிலும் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை வளாகத்திற்குள் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர பார்வையாளர்களுக்கு இன்று அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply