கடும் ரகளையால் வெளியேறினார் சபாநாயகர்: மதியம் 1 மணி வரை சட்டசபை ஒத்திவைப்பு
ஆளுநர் உத்தரவின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபையில் இன்று தனது மெஜாரிட்டியை நிரூபிக்க ஏதுவாக சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. 11 மணிக்கு அவை கூடியதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார்.ஆனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் வாக்கெடுப்பை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதும், ரகசிய வாக்கெடுப்பை நடத்தக்கோரி தலைவர்கள் பேசினர். ஆனால், இதனை நிராகரித்த தனபால், வாக்கெடுப்பை எவ்வாறு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை, அந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். இதனால் அமளி மேலும் அதிகரித்தது.சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர். புத்தகங்களை கிழித்து எறிந்தனர். சபாநாயகர் இருக்கைக்கு முன்பு உள்ள மேஜை உடைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் முன்பு இருந்த மைக்குகள் பிடுங்கி வீசப்பட்டன. சபாநாயகர் மைக் உடைக்கப்பட்டது. ஒருகட்டத்தில் சபாநாயகரின் இருக்கை மீது ஏறவும் சில எம்.எல்.ஏ.க்கள் முயன்றனர். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சபாநாயகர், அவை நடவடிக்கைகளை ஒரு மணி வரை ஒத்திவைப்பதாக கூறி அவையில் இருந்து விறுவிறுவென வெளியேறினார்.
ஒரு மணிக்கு அவை கூடியபோது இதே நிலை நீடித்தால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகர் முடிவு எடுப்பார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply