சசிகலாவை புழல் ஜெயிலுக்கு மாற்ற முடியுமா?: கர்நாடக அரசிடம் மனு கொடுக்க முடிவு

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு ஜெயில் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.இதையடுத்து 3 பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இவர்கள் மீதான வழக்கு தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகும். எனவே, சசிகலா உள்ளிட்டோரை தமிழக ஜெயிலுக்கு மாற்றுவதற்கு விதிகளில் இடம் உள்ளது.

அதன் அடிப்படையில் சசிகலாவையும் மற்றவர்களையும் தமிழக ஜெயிலுக்கு மாற்ற தேவையான முயற்சிகளை சசிகலா தரப்பில் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறும் போது, சசிகலாவை பெங்களூருவில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதற்கான பணிகள் தொடங்கி விட்டன என்று தெரிவித்தனர்.

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் ஆவடி குமார் கூறும் போது, இந்த வழக்கை பொருத்தவரை சசிகலாவை தமிழக ஜெயிலுக்கு மாற்றுவதற்கு எல்லா தகுதிகளும் உள்ளன வக்கீல்கள் அவரை இங்கு மாற்றுவதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுப்பார்கள். சட்டப்படி அவரை இங்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

இது சம்பந்தமாக சட்டவிதிகள்படி சசிகலாவின் வக்கீல் பரப்பன அக்ரஹாரம் ஜெயில் சூப்பிரண்டு அல்லது கர்நாடக சட்ட மந்திரியிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக சசிகலாவின் வக்கீல் குலசேகரன் கூறும் போது, இந்த விவகாரம் 2 மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. நாங்கள் கர்நாடக அரசிடம் இந்த வேண்டுகோளை கொண்டு செல்வோம். அவர்கள் தமிழக அரசுக்கு அதை அனுப்பி முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

கர்நாடக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த விவகாரத்தை பொறுத்தவரை இதற்கு முன்பு நடக்காத ஒன்று. எனவே, கர்நாடக சட்டத்துறை அனைத்து சட்ட வி‌ஷயங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார்.

சசிகலா நேரடியாக கர்நாடக அரசை அணுகலாமா? அல்லது கோர்ட்டு மூலம் அணுகலாமா? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். இது சம்பந்தமான எங்களுக்கு இதுவரை எந்த வேண்டுகோளும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதாடிய அரசு வக்கீல் ஆச்சாரியா கூறியதாவது:-

ஜெயில் விதிகள்படி ஒரு கைதியை இன்னொரு ஜெயிலுக்கு மாற்றுவதாக இருந்தால் அது சம்பந்தமாக 2 ஜெயில்களின் மூத்த அதிகாரிகள் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம். ஆனால் சசிகலா வழக்கு வித்தியாசமானது. அவர் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

எனவே, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பெறாமல் அவரை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது என்று நான் கருதுகிறேன். சுப்ரீம் கோர்ட்டின் தகவல் இல்லாமல் அவரை மாற்றினால் அது பின்னர் சட்ட ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவின் வக்கீல் ஒருவர் கூறும் போது, சசிகலா மீதான தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்து உள்ளோம். மனுவை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றார்.

சசிகலாவை நேற்று அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் வக்கீல்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது தமிழக ஜெயிலுக்கு மாற்றுவது மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி விவாதித்ததாக தெரிகிறது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

ஆனால், சசிகலா சில நாட்கள் பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply