ஏமனில் தற்கொலைப்படை தாக்குதல்: 8 வீரர்கள் உயிரிழப்பு

ஏமன் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபிய கூட்டுப்படைகள் களம் இறங்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், ஏமன் நாட்டில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜிஞ்சிபார் என்ற இடத்தில் நேற்று அதிகாலை ராணுவ முகாம் ஒன்றில், ராணுவ சீருடை அணிந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டிச்சென்று வெடிக்கச் செய்தார்.

 

இந்த குண்டுவெடிப்பில் அந்தப் பகுதியே குலுங்கியது. பெரும் புகை மண்டலமும் உருவானது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 8 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதி பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply