மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு

மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறதென அரசியலமைப்புச் சட்டத்தரணியும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பியுமான ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய அவர், நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் சுதந்திரம் என்பவற்றுக்ெகதிராக செயற்படும் எந்தவொரு மாகாண சபையையும் கலைப்பதற்கோ அல்லது அதன் அதிகாரங்களை மீளப் பெறுவதற்கோ ஏற்ற வகையில் மத்திய அரசுக்கு வலு சேர்க்கக்கூடிய யோசனையொன்று புதிய அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்காக யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

 

தற்போதைய அரசியலமைப்பில் இந்த உள்ளடக்கம் இல்லையென சுட்டிக்காட்டிய அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்த யோசனையை வரவேற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

‘வழிப்படுத்தல் குழுவில் ‘அதிகாரப் பகிர்வு’ என்ற தலைப்பு மிக நீண்ட நேரத்திற்கு விவாதிக்கப்பட்டது. இதேவேளை, இங்கு கலந்துகொண்ட ஏழு மாகாணங்களின் முதலமைச்சர்களும் அதிகாரப் பகிர்வு நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநரின் அதிகாரங்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆளுநருக்குள்ள பொது நிர்வாக அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதனையே அவர்கள் விரும்புகின்றார்கள்’ என்றும் அவர் கூறினார்.

 

இக்கூட்டத்தில் மஹிந்த ஆதரவு அணியினர் கலந்து கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply