பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப் புலிகள் தடுத்தனர்: பிரிட்டன், பிரான்ஸ் குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்த காலத்தை பயன்படுத்தி பொதுமக்களை மோதல் பகுதிகளில் இருந்து வெளியேற விடாமல் தடுத்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது பிரிட்டனும், பிரான்ஸும் கண்டனம் வெளியிட்டுள்ளன. அதேவேளை, பொதுமக்கள் மோதல் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரு நாள் மோதல் நிறுத்த காலம் போதாது என்றும், ஆகவே அதிக நாள் காலகட்டத்துக்கு பிறிதொரு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அந்த நாடுகள் கேட்டிருக்கின்றன.

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் குஷ்னர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பாக நேற்று புதன்கிழமை கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்கள் இந்த மோதல் பகுதிகளில் இருந்து வெளியேறாமல் இருப்பது, அவர்களை விடுதலைப்புலிகள் பலவந்தமாக தடுத்து, அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்பதையே காண்பிப்பதாக தமது அறிக்கையில் கூறியிருக்கின்ற பிரிட்டனும், பிரான்ஸும், இலங்கை பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வு ஒன்றை காணும் வகையில், விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை கைவிட்டு, ஆயுதத்தை களைய வேண்டும் எனக் கேட்டிருக்கின்றன.

இதனிடையே இலங்கையின் மோதல் பகுதிகளில் ஒரு லட்சம் பொதுமக்களை அகப்படச் செய்திருப்பதாக விடுதலைப்புலிகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய பணிகளுக்கான துணை தலைமைச் செயலரான ஜோண் ஹோல்ம்ஸ் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply