ஈராக் குண்டு வெடிப்பில் பெண் நிருபர் உயிரிழப்பு
ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொசூலின் கிழக்குப் பகுதியை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து ராணுவம் மீட்டு விட்டது. தற்போது அந்த நகரின் மேற்குப்பகுதியையும் மீட்பதற்காக ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இது தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக குர்திஷ்தான் தன்னாட்சிப்பகுதியை சேர்ந்த தனியார் டி.வி. சேனலின் பெண் நிருபர் ஷிபா கார்டி சென்றிருந்தார். அவருடன் கேமராமேன் யூனிஸ் முஸ்தபாவும் சென்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு அவர்கள் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தபோது அதில் சிக்கிக்கொண்டனர். இதில் பெண் நிருபர் ஷிபா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். கேமராமேன் யூனிஸ் முஸ்தபா படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு எர்பில் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து ஷிபா கார்டி பணியாற்றி வந்த டி.வி. சேனல் ‘ரூடா’, சமூக வலைத்தளம் ஒன்றில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘‘எங்கள் டி.வி. சேனலின் முன்னணி போர் செய்தியாளர் ஷிபா கார்டி, போர்ச்செய்தியை சேகரிக்க சென்றிருந்தபோது மொசூலில் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார். எங்களின் துணிச்சல் நிறைந்த செய்தியாளர்களில் அவர் ஒருவர். அவரை இழந்து தவிக்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply