முதலமைச்சர்களின் கூட்டத்தை பகிஷ்கரிக்க ஏகமனதாக தீர்மானம்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் முதலமைச்சர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்காதிருக்க மாகாண முதலமைச்சர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். கடந்த பெப்ரவரி (22) மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவின் அலுவலகத்தில் இடம்பெற்ற முதலமைச்சர்களுக்கான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டதுடன் இந்தக் கூட்டம் மூன்று மணித்தியாலங்கள் நீடித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

நேற்றுக் காலை இந்த கூட்டம் நடைபெற இருந்தது.

 

இந்தக் கூட்டத்தை முதலமைச்சர்கள் புறக்கணித்தமைக்கான காரணம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் வினவிய போது அவர் தெரிவித்ததாவது:

 

தமது அமைச்சினூடாக மாகாண சபைகளுக்கான நிதி அதிகாரங்களை கட்டுப்படுத்தி உள்ளூராட்சி மன்ற அமைச்சின் ஒரு திணைக்களமாக மாகாண சபைகளை மாற்றுவதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த காலங்களில் பிரயத்தனங்களை முன்னெடுத்திருந்தார். இதனால் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவரது தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்பதென்ற கேள்வி முதலமைச்சர்கள் மத்தியில் இருந்ததாக கிழக்கு முதலமைச்சர் கூறினார்.

 

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவை சுயாதீனமாக இயங்கக் கூடிய நிலை உருவாக வேண்டுமென்ற கோரிக்கையை முதலமைச்சர்கள் முன்வைத்து வரும் நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் அதிகாரப் பகிர்வு குறித்து சாதகமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.இந் நிலையில் இவ்வாறான கூட்டங்களின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை முடக்குவதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா முயற்சிப்பதாகவே முதலமைச்சர்கள் கருதுகின்றனர்.

 

அது மாத்திரமன்றி நிதி ஆணைக்குழு மற்றும் தேசிய சம்பள மற்றும் ஆளணி ஆணைக்குழுவுடன் மாதம் இரு முறை கலந்துரையாடுவதற்கு இதில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பல முறை இந்த ஆணைக்குழுக்களுடன் கலந்துரையாடியும் தீர்வேதும் கிடைக்காததால் வெறும் காலத்தைக் கடத்தும் செயற்பாடாகாவே இவற்றைக் கருத வேண்டியுள்ளது.

 

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் கடந்த வருடத்திற்குரிய 35 வீதமான நிதியே இதுவரை மத்தியரசினால் வழங்கப்பட்டுள்ளது. பல அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்த நிலையில் மீதி நிதியைப் பெறுவதற்கு பற்றுச் சீட்டுக்களை வைத்துக் கொண்டு அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply