கேப்பாப்பிலவு மக்கள் தாமே தமக்காக போராட்டத்தை நடாத்தியிருக்கின்றார்கள் எந்த அரசியல்வாதியும் உரிமை கோர முடியாது

கேப்பாப்பிலவில் தமது சொந்தக் காணியை மீளத்தரக் கோரி காணி உரிமையாளர்கள் நடத்திய காணி விடுவிப்பு போராட்டம் பாரிய சாத்வீக வேள்வியாக அமைந்தது. இன்று காணி விடுவிப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்றால் அவர்களுடைய தொடர்ச்சியான தியாக போராட்டமே காரணமாகும். அவர்கள் நடாத்திய துயரம் மிக்க போராட்டம் தான் அரசியல்வாதிகளை கண்மூடி இருக்க விடாது பங்களிக்க தூண்டியது. இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை பாராட்டி ஆக வேண்டும். அவர் தன்னுடைய இவ்வார இறுதியிலான வட பகுதி விஜயத்தின் போது இந்த விடயம் நல்லதொரு முடிவை கொண்டிருக்க வேண்டும் என்பதை படைத்தலைமைகளிடம் வலியுறுத்தியிருந்தார். 25 குடும்பங்களின் காணிகள் தொடர்ந்;தும் படையினரிடம் இருக்கின்றது. இவையும் வெகுவிரைவில் விடுவிக்கப்படும் என நம்புவதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் மேல்மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

மேலும், காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி பிலக் குடியிருப்பு மக்கள் தமது போராட்டத்தை தொடர்வது என்பதும் நியாயமானதொன்றாகவே அமைகின்றது. ஆயினும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் வழங்கிய உறுதி மொழியை இம்மக்கள் ஏற்றுக் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுறுத்தியிருக்கின்றார்கள்.
பிலக்குடியிருப்பின் 84 குடும்பங்களுக்கும் அவர்களுடைய காணிகளை வழங்கும் பொழுது தற்போதிருக்கும் இடங்களிலிருந்து உடனடியாக வெளியேற மாவட்ட, பிரதேச செயலக அதிகாரிகள் உடனடியாக முயற்சிக்;க கூடாது. ஏனெனில் வெற்றுக் காணிகளில் அவர்கள் எப்படி வாழ முடியம் என்கின்ற மனிதாபிமான கேள்வி எழுகின்றது. தங்களுடைய சொந்த காணிகளில் தமது இருப்பை அவர்கள் உறுதி செய்ததன் பின்னர் வேண்டுமானால் தற்போதிருக்கும் தற்காலிக இடங்களில் இருந்து வெளியேற முடியும்.
இந்த விடயத்தில் அவர்களுடைய ஓயாத போராட்டம் தான் அரசியல்வாதிகளை அவர்களை நோக்கி அழைத்தது ஆனாலும் தென்னிலங்கையிலிருந்து சென்ற மக்களும் பௌத்த குருமாரும் பாடசாலை சிரேஷ்ட மாணவர்களும் கூட நேரில் சென்று அவர்களுடைய நியாயத்தை கண்டு வியந்து தமது எதிர்ப்பையும் அவர்களுடைய துயரத்தோடு பகிர்ந்து கொண்டனர். இந்த நில விடுவிப்பு தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் வன்னி மாவட்டத்திற்கான விசேட வேலைத்திட்ட பணிப்பாளருமான பிரபா கணேசன் அவர்களும் நானும் எமது கட்சி உறுப்பினர்களுடன் சென்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்து விலாவாரியாக எடுத்துரைத்தோம் அவரும் நிலமையை தெளிவாக புரிந்து கொண்டு பேசினார். காணிகளை விடுவிக்க தான் நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவாதம் வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான போராட்டத்தையும் கூட அவ்வழி சென்ற தமிழ் அமைச்சர் ஒருவர் தவிர்க்க முடியாது ஜீப்பிலிருந்து இறங்கி சென்று பார்த்திருக்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்தினரென்றால் இதற்கு காரணம் கேப்பாப்பிலவு மக்களின் அயராத விடா முயற்சியுடன் கூடிய போராட்டமே அன்றி வேரொன்றும் இல்லை.

தங்கள் சொந்த நிலத்திற்கு சென்ற பின்பும் தமது நிலங்ளை மூடியும் ஊடறுத்தும் விமானப் படையினர் புதிய தூண்களை அமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் கண்ணீர்விட்டு கதறியிருக்கின்றார் என்றால் கடந்த யுத்தத்தினால் தமிழ் மக்கள் வரலாறு காணாத துயரை அடைந்திருக்கின்றார்கள் என்பதை இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். 54 குடும்பங்களின் காணிகளை விடுவித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பொழுதும் 25 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்ந்தும் விமானப் படையினரிடமே இருக்கின்றது. இதனால் இவர்களது போராட்டம் வெற்றி பெறும் வகையிலும் மனிதாபிமான அடிப்படையிலும் முழு நிலமும் விடுவிக்கப்படும் போதுதான் நிம்மதி பிறக்கும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ் மக்களின் நலன் கருதி வலியுறுத்தியிருக்க வேண்டிய போராட்டத்தை கேப்பாப்பிலவு மக்கள் தாமே தமக்காக போராட்டத்தை நடாத்தியிருக்கின்றார்கள் என்பதுதான் இன்றைய யதார்த்தம் என்பதை மக்கள் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply