உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ரூ.70 ஆயிரம் கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு: நீதிபதி அர்ஜித் பசாயத்
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவின் துணைத்தலைவரான நீதிபதி அர்ஜித் பசாயத், ஒடிசா மாநிலம், கட்டாக்கில் நேற்று பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்களை கவனிக்கிற பல்வேறு அமைப்புகளின் உயர் அதிகாரிகளின் கூட்டத்தைக்கூட்டி ஆலோசனை நடத்தினார். கருப்பு பண ஒழிப்பில் பல்வேறு முகமைகளும் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக் கொள்வது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த கூட்டத்துக்கு பின்னர் நீதிபதி அர்ஜித் பசாயத், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சேர்த்து மொத்தம் ரூ.70 ஆயிரம் கோடி கருப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வெளிநாட்டில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சிறப்பு புலனாய்வு குழு தனது 6-வது இடைக்கால அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் ஏப்ரல் மாதம் முதல் வாரம் சமர்ப்பிக்கும்.
சிறப்பு புலனாய்வு குழு, ஏற்கனவே அளித்துள்ள தனது இடைக்கால அறிக்கைகளில் கருப்பு பணம் உருவாவதை முளையிலேயே தடுப்பதற்கு, பல்வேறு சிபாரிசுகளை செய்துள்ளது.
எங்களின் பல்வேறு சிபாரிசுகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. கருப்பு பண ஒழிப்பு தொடர்பான இன்னும் சில பரிந்துரைகள் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.
ரூ.15 லட்சமோ அல்லது அதற்கு அதிகமோ ரொக்கமாக கையில் இருந்தால் அது கணக்கில் காட்டப்படாத பணம் என கருதப்பட வேண்டும் என்பது எங்களுடைய சிபாரிசுகளில் ஒன்று. அதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க பரிமாற்றம் சட்டவிரோதமானது, அது சட்டப்படி தண்டிக்கத்தக்கது என்று நாங்கள் பரிந்துரை செய்தோம். அதை ஏற்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply