இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு பாதகம் : செல்வம் அடைக்கலநாதன்
இலங்கைக்கு நல்லிணக்க பொறுப்புகூறலுக்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நீதிக்காக ஏங்கும் தேசிய இனத்திற்கு சாதகமாக அமையாது என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை அரசாங்கத்திற்கு நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு கால அவகாசம் வழங்கப்பட கூடாது என தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பல்வேறு வழிகளிலும் இலங்கை தேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கு நீதி கிடைப்பதற்கான தருணங்கள் கடந்தே சென்றுள்ளது. இவற்றிலும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட பல்வேறான கோரிக்கைகள் இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே சர்வதேசத்தினை நாட வேண்டிய நிலைக்கு உள்ளானோம்.
இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனைகளையிட்டு நாம் மன ஆறுதல் அடைந்த வேளையில் அதனூடான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு தொடர்ந்தும் காலம் கடத்தி வருகின்றமை வேதனைக்குரியது.
இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது, உள்ளக பொறிமுறையினூடாகவே விசாரணை என்று தெரிவிப்பதானது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகவே உள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கில் தீர்ப்பும், குமாரபுரம் கொலைவழக்கு தீர்ப்பும் தமிழர்களை ஏமாற்றியுள்ள நிலையில் உள்ளுர் பொறிமுறையினூடான தீர்வில் நீதி நிலைநாட்டப்படும் என்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது.
இதற்குமப்பால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்துள்ள நிலையிலும் கூட இதுவரை அலுவலகத்தினை திறப்பதற்கு காலம் கடத்துவதும் இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்டுள்ள தமிழர்களின் நிலங்கள் விடுவிக்கப்படாமலும் அந் நிலங்களை மீட்க மக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை தற்போது காணப்படுவதும் இலங்கையில் தேசிய இனங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு சமானமாக பார்க்கப்படவில்லை என்பதனை பறைசாற்றி நிற்கின்றது.
எனவே மீண்டும் மீண்டும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறலுக்கான கால அவகாசத்தினை வழங்க மனித உரிமை பேரவை எத்தனிக்க கூடாது என கேட்டுக்கொள்கின்றேன் என அவ் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply