அ.தி.மு.க பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்படுவார்: மா.பாண்டியராஜன் தகவல்
திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் மா.பா.பாண்டியராஜன் பேசியதாவது:-
புரட்சி தலைவி அம்மா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். அ.தி.மு.கவில் உள்ளவர்கள் ஓ.பி.எஸ். தலைமையையே விரும்புகிறார்கள். மக்கள் விருப்பத்துக்கு மாறாக அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக டி.டி.வி தினகரனை அ.தி.மு.கவின் துணை பொதுச்செயலாளராக சசிகலா அறிவித்து விட்டு சென்றார்.
ஆனால் தேர்தல் கமிஷன் அந்தஅறிவிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. டி.டி.வி தினகரன் யார் என்று தேர்தல் கமிஷன் கேட்கிறது. அ.தி.மு.க வில் அவரது பெயர் இல்லையே என்று வினா எழுப்பியுள்ளது.
கட்சியில் இருந்து அம்மாவால் நீக்கப்பட்ட தினகரன் இன்று அதே கட்சியை நடத்துகிறார் என்றால் தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள்?. அடுத்த கட்டமாக சசிகலா நியமனமும் செல்லாது என்ற அறிவிப்பு விரைவில் வரும். ஓ. பன்னீர்செல்வம் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஓ. பன்னீர்செல்வம் இது வரை கண்டிராத அளவுக்கு சிறப்பான ஆட்சியை நடத்தினார். அவரது தலைமையின் கீழ் விரைவில் அ.தி.மு.க வீறு நடைபோடும். அ.தி.மு.க வும் இரட்டை இலையும், தலைமைக்கழகமும் நம்மிடம் வந்து சேரும்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-
புரட்சி தலைவி அம்மா மறைவுக்கு பிறகு அவரது எண்ணத்துக்கு மாறாக சசிகலா குடும்பத்தின் கையில் கட்சியும், ஆட்சியும் சென்றுள்ளது. இதை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதை வென்றெடுக்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாம் தர்மயுத்தம் நடத்தி வருகிறோம்.
நமது அணி தான் உண்மையான அ.தி.மு.க. விரைவில் தலைமைக்கழகம் நமக்கு வந்து சேரும். இரட்டைஇலை சின்னமும் நமக்கு தான் வரும். இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் 122 பேரை வைத்து தங்களது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபித்து இருக்கலாம்.
ஆனால் சட்டமன்றத்தை விட மக்கள் மன்றமே மிகப்பெரியது. இறுதி எஜமானர்கள் மக்கள் தான். அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓ. பன்னீர் செல்வம் பக்கம் தான் உள்ளனர். இப்போது நடைபெறும் ஆட்சி சசிகலாவின் பினாமி ஆட்சி.
இந்த ஆட்சியை மக்களும், தொண்டர்களும் விரும்பவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆர்.கே. நகரில் பேசும் போது எதிர்கட்சிகள் அனைவரும் தேர்தலில் இங்கு டெபாசிட் இழப்பார்கள் என கூறியுள்ளார். இதை விட நகைச்சுவை வேறு எதுவும் இருக்க முடியாது.
சசிகலா அணி வேட்பாளர் சுயேச்சை வேட்பாளரை விட கடைசி ஆளாக மிக குறைந்த ஓட்டு வாங்குவது உறுதி. தி.மு.கவுடன் சேர்ந்து ஆட்சியை கலைக்க பார்ப்பதாக ஓ.பி.எஸ். மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த ஆட்சியை கலைப்பது எங்கள் நோக்கம் அல்ல. ஓ.பி.எஸ். தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சியை உருவாக்குவது எங்கள் லட்சியமாகும்.
சசிகலாவின் பினாமி ஆட்சியை மாற்றி அம்மாவின் ஆட்சியாக ஆக்குவோம். மறைமுகமாக சசிகலா ஆட்சியை நடத்துவது துரோகம். இதை மக்களும், தொண்டர்களும் விரும்பவில்லை. எனவே ஓ.பி.எஸ். தலைமையில் உண்மையான ஆட்சி மலரும் நாள் மிக விரைவில் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புரட்சித்தலைவி அம்மா போயஸ் கார்டனில் இருந்து எந்த நிலையில் அப்பல்லோ கொண்டு செல்லப்பட்டார் என்பது மர்மமாக உள்ளது. வீட்டில் அவரிடம் கையெழுத்து வாங்க முயற்சித்ததாகவும், அப்போது அவர்அடித்து கீழே தள்ளி விடப்பட்டதாகவும் வாட்ஸ் அப்களில் தகவல் பரவி உள்ளது.
18 நாட்களாக அம்மா நோய்வாய்ப்பட்டு இருந்த போது தக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வாட்ஸ் அப், டுவிட்டரில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு விளக்கம் கொடுக்கலாமே என்று சசிகலாவிடமும், தினகரனிடமும் மூத்த எம்.எல்.ஏ.க்களிடமும் நான் விளக்கம் கேட்டேன். ஆனால் அவர்களிடம்இருந்து எந்த பதிலும் இல்லை.
அப்பல்லோவில் கண்காணிப்பு கேமராவை அகற்றி இருக்கிறார்கள். இது யார் உத்தரவில் நடந்தது. அம்மா சிகிச்சையில் இருந்த போது சசிகலா குடும்பத்தினர் மட்டும் பார்த்துள்ளனர். வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. அம்மா மர்மமான முறையில் இறந்துள்ளதாக மக்கள் அனைவரும் கருதுவதால் ஓ.பி.எஸ் ஒருவரால் தான் அந்த மர்மத்தை கண்டு பிடிக்க முடியும் என மக்கள் நினைக்கிறார்கள். அதற்கான தர்மயுத்த போராட்டம் தான் உண்ணாவிரதம் சசிகலா, தினகரனிடம இருந்து இயக்கத்தை காக்க ஓ.பி.எஸ். எங்கள் பயணம் தொடரும் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply