ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கவே ஏவுகணை பரிசோதனை: வட கொரியா மிரட்டல்

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

 

உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நான்கு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தது. அடுத்தடுத்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாகவும் தென் கொரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

சுமார் ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணைகள் திட்டமிட்ட இலக்கை தாக்கியதாக செய்திகள் வெளியாகின.

 

வட கொரியாவின் எதிரி நாடான தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றுவரும் நிலையில் நேற்று நடத்தப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு ஜப்பான், தென் கொரியா  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

 

 

இந்நிலையில், ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக, வடகொரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அதிபர் கிம் ஜாங் உன்-னின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நமது ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக அமைந்திருந்தது. இதையடுத்து, ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் அடுத்தகட்ட பணிகளை தொடருமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply