ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயம் குறித்து அமைச்சர் முரளிதரன் புகழாரம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு துணிச்சல் மிக்க தலைவர் என சமூக நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுபற்றி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,கிளிநொச்சிப் பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்தமை வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு நிகழ்வாகும். ஏனெனில் இதுவரை காலமும் நாட்டின் எந்தவொரு ஜனாதிபதியும் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்யவில்லை.

ஆனால் எமது ஜனாதிபதி புத்தாண்டு தினத்தில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து கள நிலைவரங்களை அவதானித்ததோடு, அங்குள்ள படை வீரர்களுடன் சந்தோஷமாக புத்தாண்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றியுள்ளார். இது மிகவும் பாராட்டத்தக்க ஒரு விடயமாகும்.

ஏனெனில் இன்று அங்குள்ள படையினர் தமது உறவுகளையும் குடும்பங்களையும் பிரிந்த நிலையில் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இணைந்து புத்தாண்டு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொண்டமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

புலிகளிடமிருந்து வாகரைப் பிரதேசம் கைப்பற்றப்பட்டபோது கூட ஜனாதிபதி அங்கும் நேரடியாக விஜயம் செய்திருந்தார். இப்போது கிளிநொச்சிக்கும் சென்றுள்ளார். இவ்வாறான பல திருப்புமுனைகளை அவர் ஏற்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி மேற்கொள்ளும் இவ்வாறான விஜயங்கள் மூலம் எதிர்காலத்தில் வடக்கிலும் பல அபிவிருத்திகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அப்பிரதேசங்களை நேரடியாகச் சென்று பார்க்கும்போதுதான் அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.

தற்போது வன்னிப் பிரதேசம் முற்றாக மீட்கப்பட்டுள்ள நிலையில் ~வடக்கின் வசந்தம்| எனும் திட்டத்தினூடாக ஜனாதிபதியின் வழிகாட்டலில் விரைவில் அப்பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக மாறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply