ஆர்.கே.நகர் தொகுதியில் 10 கட்சிகள் மோதுகின்றன
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.இந்த தொகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் பல முனை போட்டி ஏற்பட்டாலும் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே வெற்றிக்கனியை ருசித்து வந்துள்ளது.1977-ல் இந்த தொகுதி உருவாக்கப்பட்டு முதல் தேர்தலை சந்தித்தது. அப்போது அ.தி.மு.க., தி.மு.க., ஜனதா, இந்திரா காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகள் மோதியது.
கடைசியாக கடந்த 2016 பொதுத்தேர்தலில் 6 முனை போட்டியை சந்தித்தது.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து தற்போது மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர மேலும் பல கட்சிகள் களம் இறங்க காத்திருக்கின்றன.
அ.தி.மு.க. 2 ஆக பிளவு பட்டுள்ளது. சசிகலா தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் மோதி பார்க்க முடிவு செய்து விட்டன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனியாக போட்டியிடுகிறார்.
பா.ஜனதாவும் போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து பா.ஜனதா போட்டியிட்டது. இந்த தேர்தலிலும் போட்டியிடுவது உறுதி என்று மாநில தலைவர் டாக்டர் தமிழிசை கூறி உள்ளார்.
பா.ம.க.வும் போட்டியிட முடிவு செய்துள்ளது. தே.மு.தி.க.வை பொறுத்தவரை கடந்த பொதுத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் இடைத்தேர்தலிலும் மிக மோசமான தோல்வியையே சந்தித்தது. இருந்தாலும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது தான் கட்சியின் உயிரோட்டத்தை உணர்த்தும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது. எனவே தே.மு.தி.க.வும் போட்டியிடுகிறது.
மக்கள் நலக்கூட்டணியும் வேட்பாளரை நிறுத்துகிறது. நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று சீமான் அறிவித்து விட்டார். த.மா.கா.வும், ம.தி.மு.க.வும் இன்னும் முடிவு செய்யவில்லை. எப்படியும் 10 கட்சிகள் போட்டியிடும் என்று தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply