இன்று ஜனாதிபதியைச் சந்தித்தார் விஜய் நம்பியார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூனின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியார், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவைச் சந்தித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட விஜய் நம்பியார் நேற்று மாலையே இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவைச் சந்தித்தார்.இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், வெளிவிவகார அமைச்சரையும் அவர் சந்தித்தார். பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் நிலைமைகள் மற்றும் வவுனியாவிலுள்ள முகாம்களிலுள்ள ஐ.நா. பணியாளர்கள் வெளியேற அனுமதிக்கப்படாமை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது. எனினும், பாதுகாப்பு வலயத்தை நோக்கி அரசாங்கப் படைகள் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது முக்கியமானது எனக் கருதப்படுகிறது. இவர் வவுனியாவுக்குச் சென்று இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்களுக்கிடையில் சிக்குண்டிருக்கும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பான்கீ மூன், பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் குறித்த தமது அக்கறையை வெளிக்காட்டியிருந்தார். அத்துடன், இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நிலைமைகள் குறித்த ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்சையும் ஐ.நா. செயலாளர் இலங்கைக்கு அனுப்பியிருந்தார்.

இலங்ககை வந்த ஜோன் ஹோல்ம்ஸ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துச் சென்றதுடன், தனது விஜயம் தொடர்பான அறிக்கையொன்றை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்திருந்தார்.

ஜோன் ஹோல்ம்சைத் தொடர்ந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் வோல்டர் கலின் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வவுனியா சென்று இடம்பெயர்ந்திருக்கும் மக்களைப் பார்வையிட்டிருந்தார். இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் சர்வதேச மனிதநேயச் சட்டங்களுக்கு அமைய நடத்தப்படுவதுடன், மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கலினும் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply