ஆர்.கே.நகர் தொகுதியில் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டி?
ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பி.எஸ்., ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகிய 3 அணிகள் களத்தில் இறங்குகின்றன.சசிகலா அணியில் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 15-ந்தேதி ஆட்சிமன்ற குழு கூடுகிறது. ஓ.பி.எஸ். தரப்பும் புதிதாக ஆட்சி மன்ற குழுவை அமைத்துள்ளது.இந்த 2 அணிகளும் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என போட்டி போட்டுக் கொண்டு கட்சிக்குள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்ட முறையே தவறானது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். அணியினர் மனு கொடுத்துள்ளனர்.அதுகுறித்து சசிகலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டதையடுத்து அதற்கு அத்தரப்பு சார்பில் பதில் மனுவும் கொடுத்துள்ளனர்.இந்நிலையில் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை இரட்டை இலை சின்னம் வெற்றியை நிர்ணயிக்கும் ஒரு மாபெரும் சக்தியாகும். அதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவே இரு அணிகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் இறுதிகட்ட முடிவை அறிவிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதனால் ஒ.பி.எஸ். அணியினர் இரட்டை இலை கிடைக்காதபட்சத்தில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
ஓ.பி.எஸ். அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் நிறுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவர் 1991-96 சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தவர். தொகுதியில் நன்கு பரிச்சயமானவர். வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் அவரை நிறுத்தினால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஓ.பி.எஸ். அணியினர் கருதுகின்றனர்.
இதுகுறித்து ஓ.பி.எஸ். தரப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவருக்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவு அதிகம் இருப்பதால் அவர் நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார். இவருக்கு ஆதி ஆந்திர மக்கள் 25 ஆயிரம் பேரின் வாக்குகள் கிடைக்கும் என்றார்.
ஓ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில் ‘சேவல்’ சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் சேவல் சின்னம் கேட்கவும் முடிவு செய்திருப்பதாக ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply