மேற்கு மொசூல் நகரின் பெரும்பகுதியை கைப்பற்றிய ஈராக் ராணுவம்
மேற்கு மொசூல் நகரில் பெரும்பகுதியை ஈராக் ராணுவம் கைப்பற்றியது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாதவாறு சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர். சிரியா, ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரான மொசூலை கைப்பற்றிக் கொண்டனர். இந்த நகரை மீட்பதற்காக அமெரிக்க ராணுவ உதவியுடன் ஈராக் படை வீரர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு மெல்ல மெல்ல வெற்றி கிடைத்து வருகிறது. பயங்கரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்தும், அவர்களை கேடயமாக பயன்படுத்தியும் சண்டையில் ஈடுபட்டு வருவதால் ஈராக் ராணுவம் முதலில் சற்று பொறுமையை கடைபிடித்து வந்தது.
இந்த நிலையில், பயங்கரவாதிகளை குறிப்பிட்ட பகுதியை நோக்கி விரட்டியடிப்பதில் ஈராக் ராணுவம் கடந்த 5-ந் தேதி முதல் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வந்தது. அமெரிக்க ராணுவம் வான்வெளித் தாக்குதலை மேற்கொள்ள ஈராக் ராணுவம் தரைவழியாக தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இதன் காரணமாக மேற்கு மொசூல் நகரில் பயங்கரவாதிகள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஓரம் கட்டப்பட்டனர். கடந்த 2 நாட்களாக இங்கு இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையில் பயங்கரவாதிகள் பெரும் உயிர்ச்சேதத்தை சந்தித்தனர்.
ஈராக் ராணுவம் முக்கிய பகுதிகளில் படை வீரர்களை குவித்து கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிலை குலைந்தனர். அவர்களை 3 பகுதிகளில் முற்றுகையிட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளால் நகரை விட்டு தப்பியோட முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் சண்டையிட்டு செத்து மடிவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. இந்த சண்டையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இது ஈராக் ராணுவத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதனால் தற்போது மேற்கு மொசூல் நகரின் 4-ல் 3 பகுதி ஈராக் ராணுவத்தின் வசம் வந்துவிட்டது.
இதுபற்றி ஈராக்கின் பயங்கரவாத தடுப்பு சேவை பிரிவின் மேஜர் ஜெனரல் மான் அல்-ஷாதி கூறுகையில், “எந்த பயங்கரவாதியாலும் இனி மொசூலை விட்டு தப்ப முடியாது. அப்படி சென்றால் அவர்கள் மரணத்தைத்தான் தழுவ நேரிடும். அவர்கள் வெளியே தப்பிச் செல்ல முடியாதவாறு அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. தற்போது மேற்கு மொசூல் நகரின் 75 சதவீத பகுதி ராணுவத்தின் வசம் வந்துவிட்டது. எஞ்சிய பகுதியும் விரைவில் மீட்கப்படும்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த சண்டை சாதாரணமானது அல்ல. மக்களோடு மக்களாக கலந்துள்ள பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தவிர பயங்கரவாதிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர். தற்கொலை படைத் தாக்குதலையும் நடத்தினர். இவற்றையெல்லாம் சமாளித்து, அப்பாவி மக்களின் உயிருக்கும் பாதிப்பு இல்லாதவாறு மேற்கு மொசூல் நகரின் பெரும் பகுதியை கைப்பற்றி இருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே கிழக்கு மொசூல் நகரை ஈராக் ராணுவம் கைப்பற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply