இலங்கைக்கு கால அவகாசம் வழங்கினால் தமிழர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து : வைகோ
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட எதனையும் நிறைவேற்றாமல் நிராகரித்த நிலையில், மீண்டும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தமிழர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் (24) வரை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 34 ஆவது அமர்வு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. மனித உரிமைக் கவுன்சில் ஆணையாளர் செய்யித் அல்ஹுஸைனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மின்னஞ்சல் மூலம் (13 ) அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வைகோ அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: 2015 மார்ச் 02 முதல் 27 வரை ஜெனிவாவில் நடைபெற்ற 28 ஆவது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான எண் 30/1 இன்படி இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட எதனையும் நிறைவேற்றாமல் நிராகரித்துள்ளது.இந் நிலையில், இதுகுறித்து இலங்கை அரசுக்கு எந்தவித கால அவகாசமும் வழங்ககூடாது. போதுமான கால அவகாசமும், சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட எந்தச் செயலையும் இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை.
இனப்படுகொலைக்கு ஆளான ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பும், நீதியும் கிடைக்க ஐ.நா.பொதுச் சபை பிரேரணையை பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்ல உரிய பரிந்துரையை செய்ய வேண்டும். மனிதகுலத்திற்கு எதிராக வடகொரியா நடத்திய கொலைக் குற்றத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியதைப் போல இலங்கைப் பிரச்சினையில் “அனைத்துலக குற்றவியல் தீர்ப்பகம்” அமைக்கப்பட வேண்டும்.
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்த ஒன்றரை இலட்சம் சிங்கள இராணுவத்தினர் இனக்கொலையில் நொறுங்குண்ட மக்கள் மத்தியில்தான் இப்போதும் உள்ளனர். ஐ.நா.வினுடைய சிறப்புப் பார்வையாளர் அண்மையில் சமர்ப்பித்த அறிக்கையின்படி தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்ததாக சிங்கள அரசு அறிவித்த நாளில் இருந்து யுத்தத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொலைக் குற்றங்கள் குறித்து சுதந்திரமான அகில உலக விசாரணை நடைபெற வேண்டும் என்பதே தமிழர்களின் நியாயமான கோரிக்கை ஆகும்.
2015 மார்ச் மாதம் மனித உரிமைக் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களுக்கு ஓரளவு நம்பிக்கையைத் தந்தது. ஆனால், தமிழர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வண்ணம் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அமைந்தன. ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்துலக சமுதாயத்தின் கண்களில் மண்ணைத் தூவி ஏமாற்றும் விதத்தில் இலங்கை நடந்து கொள்கிறது. 2009 முள்ளிவாய்க்காலில் மட்டும் ஆறு மாதத்தில் எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வினுடைய ஆய்வறிக்கை கூறிய போதும், இந்த இனக் கொலைக் குற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கத்தில் இலங்கை அரசு கால நீடிப்பு கோருகிறது.இதை ஒருபோதும் வழங்க கூடாதென வைகோ தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply