சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டிடத்தையே தாக்கினோம், மசூதி மீது அல்ல: பென்டகன்
சிரியாவில் அலெப்போ நகரத்திற்கு வடக்கு பகுதியில் உள்ள அல்-ஜினோ கிராமத்தில் நேற்று நடைபெற்ற அல்-கொய்தா ரகசிய கூட்டத்தை குறிவைத்து, அமெரிக்க ராணுவம் வான்வெளித் தாக்குதலை நடத்தியதாகவும், மசூதி மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஆனால் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த சிரிய மனித உரிமைகள் ஆணையம், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான பென்டகன் இதனை மறுத்துள்ளது.
இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கடற்படை தளபதி ஜெஃப் டேவிஸ் தெரிவித்ததாவது, அமெரிக்க விமானம் அல்-ஜினா மசூதிக்கு அருகில் 100-க்கும் மேற்பட்ட அல்-கொய்தா தீவிரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்திய கட்டிடத்தையே குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளது. மாறாக அல்-ஜினாவில் உள்ள மசூதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அந்த மசூதி எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக இருப்பதாகவும் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் குறிவைத்த இலக்கை சரியாக தாக்கிவிட்டதாகவும், மாறாக மசூதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் கூறிய டேவிஸ், அதுகுறித்த வரைபடம் ஒன்றையும் காட்டியுள்ளார். அதில் மசூதிக்கும், தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடத்திற்கும் இடையேயான இடைவெளியை அவர் சுட்டிக்காட்டினார்.
ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரின் காரணமாக தீவிரவாதிகளை ஒழிக்க கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா சர்வதேச கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நடத்தப்படும் தாக்குதலில் எத்தகைய நோக்கமுமின்றி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிரியாவில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 3.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக நேற்று மசூதி மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளாகவும் சிரிய மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது.
மாலை நேர பிரார்த்தனையின் போது, அலெப்போ மாகாண மசூதி மீது அடையாளம் தெரியாத போர் விமானங்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் மசூதியில் இருந்த பொதுமக்கள் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ரமி அப்தல் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலெப்போ மாகாணத்திற்கு மேற்கு பகுதியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்-ஜினா என்ற கிராமத்தில் உள்ள மசூதியில் தான் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அல்-ஜினா கிராமத்தை பொறுத்தவரை கிளர்ச்சியாளர்கள் மற்றும் இஸ்லாமிய குழுக்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply