இரட்டை இலை சசிகலாவுக்கா, ஓ.பி.எஸ். அணிக்கா? எந்த நேரத்திலும் முடிவு வெளியாகலாம்
இரட்டை இலைச் சின்னம் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக, அதிமுகவின் இரு அணிகளும் தங்கள் வாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முடிவு எந்த நேரமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் இரு அணிகள் உருவாயின. ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் ஓர் அணியும் ஏற்பட்டன.
இந் நிலையில், ஆர்.கே. நகருக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக இரு அணிகளிடத்திலும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என இரு அணிகளும் கோரிய நிலையில், இன்று தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளின் சார்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் சைதி தலைமையிலான முழு தேர்தல் ஆணையத்தின் முன்பு இரு தரப்பிலிருந்தும் தலைவர்களும், மூத்த வழக்கறிஞர்களும் ஆஜரானார்கள்.
சசிகலா அணியின் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், வீரப்ப மொய்லி, மோகன் பராசரன் மற்றும் அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள்.
பன்னீர் செல்வம் அணியின் சார்பில், சி.எஸ். வைத்யநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.
பகல்11 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை இரு தரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்தன.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் எந்த நேரமும் தனது முடிவை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய மனோஜ் பாண்டியன், “ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணிதான் உண்மையான அதிமுக. அதற்குத்தான் இரட்டை இலை ஒதுக்க வேண்டும்,” என்று கூறி அதற்கான ஆதாங்களையும் ஆவணங்களையும் தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
“அதிமுக சட்ட விதிகளின்படி, பொதுச் செயலாளர்தான் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு சின்னத்தை ஒதுக்க முடியும். ஆனால், சசிகலா தாற்காலிக பொதுச் செயலாளராகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதனால் அவருக்கு சின்னம் ஒதுக்கும் அதிகாரம் இல்லை. மேலும், சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம்,” என்றார் மனோஜ் பாண்டியன்.
அதிமுகவில் உள்ல 1.5 கோடி தொண்டர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட பெருமளவிலானோர் ஓ. பன்னீர் செல்வத்துக்குத்தான் ஆதரவளிப்பதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்திருப்பதாகவும், அதற்கான ஆவணங்களை படிப்படியாக சேகரித்து ஆணையத்தில் சமர்ப்பிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply