ஓபிஸ் அணிக்கு மின்கம்பம், சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் இரு அணியினரும் பலப்பரீட்சை நடத்த தயாராகியுள்ளனர்.

அ.தி.மு.க.வின் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தனர். அதுபோல சசிகலா தரப்பிலும் இரட்டை இலை சின்னம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இரு தரப்பினரிடமும் நேற்று தலைமை தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தியது. இரு அணி வக்கீல்களும் தேர்தல் ஆணையத்தின் முன்பு ஆஜராகி இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி கடும் வாதம் செய்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நேற்று இரவு 11 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் தீர்ப்பை வெளியிட்டது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்க இயலாது என்று அறிவித்த தேர்தல் ஆணையம் அந்த சின்னத்தை முடக்கி வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

அ.தி.மு.க. என்ற பெயரை பயன்படுத்தவும் இரு அணியினருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஓ.பி.எஸ். அணியினரும், சசிகலா அணியினரும் ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய கட்சி பெயரில், புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. கட்சிக்கான புதிய பெயரையும், தலா 3 தேர்தல் சின்னங்களையும் தேர்வு செய்து பரிந்துரைக்கும் படி இரு அணியினருக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து சசிகலா அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் நேற்று இரவு புதிய கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். இன்று காலையிலும் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் இரு அணியினரும் புதிய கட்சிக்கான பெயர் மற்றும் தேர்தல் சின்னங்களை தேர்வு செய்தனர்.

இன்று காலை இரு அணியை சேர்ந்த மூத்த தலைவர்களும், வக்கீல்களும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஏற்கனவே தயார் செய்து கொண்டு சென்ற பரிந்துரை கடிதங்களை தாக்கல் செய்தனர்.

சசிகலா தரப்பினர் தங்களது புதிய கட்சியின் பெயராக ‘‘அ.தி.மு.க. அம்மா அணி’’ என்று பரிந்துரைத்தனர். மேலும் அவர்கள் ஆட்டோ, தொப்பி, கத்திரிக்கோல் ஆகிய 3 சின்னங்களில் இருந்து ஏதாவது ஒரு சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொண்டனர்.

அது போல ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை கடிதம் வழக்கப்பட்டது. அதில் அவர்கள் தங்களது அணியின் கட்சிக்கு ‘‘அம்மா அ.தி.மு.க’’ என்ற பெயரை ஒதுக்கி தருமாறு பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் தங்களுக்கு தேர்தல் சின்னமாக ‘‘இரட்டை விளக்கு மின் கம்பம்’’ சின்னத்தை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு அணியினரின் இந்த பரிந்துரைகளை தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்தது. பிறகு 11 மணி அளவில் இரு அணிக்கும் உரிய சின்னம் ஒதுக்கீடு செய்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வினருக்கு ‘‘தொப்பி’’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வினருக்கு ‘‘இரட்டை விளக்கு மின்கம்பம்’’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ‘‘அ.இ.அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா’’ என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா அணிக்கு ‘‘அ.இ.அ.தி.மு.க. அம்மா’’ என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மனுதாக்கல் செய்யும் இரு அணியினருக்கும் இந்த சின்னங்கள் மற்றும் புதிய கட்சியின் பெயர் ஒதுக்கீடு செய்து வழங்கப்படும். இதையடுத்து புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்து சொல்லி இரு தரப்பினரும் ஆதரவு திரட்டுவார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply