தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரின் பாதுகாப்பைக் கோரியுள்ளனர்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரின் பாதுகாப்பைக் கோரியுள்ளார்.
 
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளே இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அண்மைக் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்திருந்தனர். இந்த நிலையில் அண்மையில் பதவி உயர்த்தப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 42 உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரின் பாதுகாப்பு கோரப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக கருணா அம்மான் தனது உறுப்பினர்களை நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பிலும், வெலிகந்தவிலும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஏனைய உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவிருப்பதுடன், விடுதலைப் புலிகளின் ஊடுருவல் தாக்குதல்கள் குறித்து உறுப்பினர்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு பணிப்புரை வழங்கியிருப்பதாக கருணா அம்மான் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply