அமெரிக்காவில் நாட்டை விட்டு வெளியேறும்படி சீக்கிய பெண்ணுக்கு மிரட்டல்
அமெரிக்காவில் ஓடும் ரெயிலில் சீக்கிய பெண்ணுக்கு வெள்ளைக்காரர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய, ஆப்பிரிக்கர்கள் மற்றும் அவற்றின் வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. சிலவாரங்களுக்கு முன்பு இந்தியாவை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய வம்சாவளியை சேர்ந்த ராஜ்பிரீத் என்ற பெண்ணுக்கு அமெரிக்க நாட்டின் வெள்ளைக்காரர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
அண்மையில், மன்ஹாட்டன் நகரில் உள்ள தனது தோழியின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக ராஜ்பிரீத் அங்குள்ள சுரங்க ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெட்டியில் அவருக்கு மிக அருகில் பயணம் செய்த வெள்ளைக்காரர் ஒருவர், சீக்கிய பெண்ணை லெபனான் நாட்டை சேர்ந்தவர் என தவறாக கருதிக்கொண்டு அவர் அருகில் வந்தார்.
அப்போது ராஜ்பிரீத் தன்னிடம் இருந்த செல்போனில் தீவிரமாக எதையோ பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட அந்த வெள்ளைக்காரர், “நீ வைத்திருக்கும் செல்போனில் அப்படி என்ன இருக்கிறது?… நீங்கள் இந்த நாட்டுக்கு என்ன செய்தீர்கள்?… உங்களைப் போன்றவர்களால்தான் நாடு சீரழிந்து விட்டது. மரியாதையாக இங்கிருந்து உனது லெபனான் நாட்டுக்கு ஓடிவிடு. இந்த நாட்டில் நீ இருக்கவே கூடாது” என்று ஆவேசத்துடன் மிரட்டி இருக்கிறார்.
அப்போது தனக்கும், லெபனானுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சீக்கிய பெண் மறுத்தார். அதை ஏற்காமல் வெள்ளைக்காரர் ராஜ்பிரீத்தை முறைத்து பார்த்துக் கொண்டே அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி சென்றுவிட்டார்.
நல்லவேளையாக சீக்கிய பெண்ணை கண்டு மனம் இரங்கிய அமெரிக்க பெண் பயணி ஒருவர் கண்களில் நீர் மல்க “நீ சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் இது நேர்ந்துவிட்டது” என்று ஆறுதல் கூறி அவரைத் தேற்றி இருக்கிறார். இன்னொரு பெண் அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரியிடம் இதுபற்றி புகார் செய்தார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தனக்கு விடுக்கப்பட்ட இனவெறி மிரட்டல் குறித்து ராஜ்பிரீத் அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்து உள்ளார். சீக்கிய பெண்ணுக்கு வெள்ளைக்காரர் விடுத்த இனவெறி மிரட்டல் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply