சிரியா மீது ஏவுகணை தாக்குதல்: ஐ.நா. சபையில் அமெரிக்கா – ரஷியா கடும் மோதல்

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல முக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐக்கியநாடுகள் சபை போன்றவை மிக காரசாரமான கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது நேற்று அமெரிக்கா பயங்கரமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் இந்த அதிரடி தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷைராத் விமானப்படை தளத்தின்மீது அமெரிக்க போர் விமானங்கள் 59 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் விமானப்படைத் தளம், போர் விமானங்கள் மற்றும் அங்கிருந்த பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை தீக்கிரையாகின. அங்கிருந்த ஏராளமான வீரர்களும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் இந்த அசுரத்தனமான தாக்குதலுக்கு சிரியா அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டிவரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிரியா நாட்டிலுள்ள விமானப் படை தளத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக விவாதிப்பதற்காக 15 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்துக்கு ரஷியா அழைப்பு விடுத்தது.

இந்த கூட்டத்தில் அமெரிக்காவின் போக்கை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐ.நா.சபையின் தூதர்களும், அமெரிக்காவின் அராஜகத்தை கடுமையாக எதிர்த்துவரும் ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது அமெரிக்காவின் மீது ரஷியா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இந்த விவாதத்தின் பேசிய ரஷியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபை துணைத் தூதர் விளாடிமிர் சஃப்ரான்கோவ், இறையாண்மை கொண்ட நாடான சிரியாவின் மீது மூர்க்கத்தனமாக அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று குற்றம்சாட்டினார்.

சிரியா அரசு தன் நாட்டு மக்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய பொலிவியா நாட்டு தூதர் சச்சா லோரென்ட்டி, தன்னை துப்பறிவாளராகவும், வக்கீலாகவும், நீதிபதியாகவும், தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவராகவும் கருதிக் கொண்டு அமெரிக்கா (டிரம்ப்) இதுபோன்ற அராஜகத்தை அரங்கேற்றியதாக குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பேசிய ஐ.நா.சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலே, சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி செய்துவரும் அட்டூழியத்துக்கு இனியும் நியாயம் கற்பிக்க முயற்சிக்க கூடாது என்று குறிப்பிட்டார்.

கடந்த வாரம் சிரியா விமானப்படைகள் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்திய இடத்தில் உள்ள விமானப் படைத் தளத்தை நாங்கள் அழித்தது நியாயமான செயலாகும். தகுந்த அவசியமும், அவசரமும் இல்லாமல் சிரியா அரசு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி அங்கு நடத்திவரும் அராஜகத்துக்கும், மனித உரிமை மீறலுக்கும் அமைதி மொழியில் பதில் அளித்து கொண்டிருக்க முடியாது. அங்கு நடைபெற்றுவரும் அத்துமீறல்களுக்கு ஈரானும், ரஷியாவும் ஆரம்பத்தில் இருந்தே பக்கத்துணையாக இருந்து வருகின்றன.

இனிமேலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கான அவசியம் நேராது என்றும் கருதுகிறோம். சிரியாவில் நடைபெற்றுவரும் கொடூரத்தை தடுக்கவும் அரசியல் ரீதியான தீர்வு காணவும் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்றும் நிக்கி ஹேலே சுட்டிக் காட்டினார்.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சிரியாவுக்கான ஐ.நா.சபை தூதர் மவுன்ஸர் மவுன்ஸர், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயமான ஆட்சியை அகற்றுவதில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கைகோர்த்துக் கொண்டு களமிறங்கியுள்ளன.

இதனால், ரஷியா மீது இவர்கள் ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இவை அத்தனையும் பொய் பரப்புரைகளாகும்.

அரபு நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம், அதனால் நீங்கள் எதையும் சாதித்து விட முடியாது என்று உங்களை எச்சரிக்கிறேன். உங்களது காலணி ஆதிக்கப்போக்கையும் சர்வாதிகாரத்தையும் கண்டு அனைத்து அரபு நாடுகளும் எரிச்சல் அடைந்துள்ளன என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்தின்போது இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் வகையில் பேசிய ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டெரெஸ், ‘தற்போது உச்சகட்டத்தை அடைந்துவரும் நிலைமைகளை கூர்ந்து கவனிக்கும் வேளையில், சிரியாவில் வாழும் மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நடைபெற்றுள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது சிரியா நாட்டின் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசியல் தீர்வுக்கு மாற்றான ஒரு பாதை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று குறிப்பிட்டார்.

அப்படியொரு தீர்வு எட்டப்படுவதற்கு உதவும் வகையில் (சிரியா அரசு மற்றும் அங்குள்ள போராளி குழுக்கள் இடையிலான) ஜெனீவா சமாதான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தவும், சாதகமாக்கவும் நாம் முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply