தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்: ப.சிதம்பரம்
ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வைத்திய நாதன் மேம்பாலம் அருகே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து 1 வருடத்துக்கு பிறகு ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நடக்கிறது.
1973-ம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தலில் ஏற்பட்ட எதிர்பார்ப்பு இப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆளும்கட்சி வலு இழந்து வருகிறது. எதிர்க்கட்சி பலமுடன் செயல்படுகிறது. ஆளும் கட்சியால் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. புதிய திட்டம் அறிவிக்கப்பட வில்லை.
ஆர்.கே.நகர் தொகுதி ஏற்கனவே முதல்-அமைச்சர் நின்ற தொகுதி. 35 அமைச்சர்கள் இருந்தும் அந்த தொகுதி இன்னும் வளர்ச்சி அடையவில்லை. கடந்த 1 ஆண்டாக இந்த தொகுதிக்கு செய்யாததை இனி எப்படி செய்வார்கள்.
தமிழகத்தில் மணல் கொள்ளை, கிராணைட் ஊழல் நடக்கிறது. தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. அமைச்சர் வீடு, ஒப்பந்ததாரர் வீடுகளில் சோதனை நடக்கிறது. இனி வரும் காலங்களில் இந்நாள் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறும்.
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அடுத்த மாதம் கூட பொதுத் தேர்தல் வரலாம். தமிழகத்தில் புதிய அரசு அமைவது நல்லது. தமிழகத்தில் ரூ.57 ஆயிரத்து 500 கோடி கடன் உள்ளது. ரூ.2500 கோடி வட்டி கட்ட வேண்டி உள்ளது. தமிழக அரசுக்கு புதிய வருமானம் ஏதும் இல்லை. டாஸ்மாக் மூலம் மட்டுமே வருமானம் வருகிறது.
பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் தமிழர்கள் பற்றி கருத்து தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.
ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. இரு அணிகள் மற்றும் தி.மு.க. இடையேதான் போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதாவுக்கு டெபாசிட் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி பேசியதாவது”-
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியில் நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன் பிறகு கருணாநிதி தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றவில்லை.
ஜல்லிக்கட்டு போராட்டம் புதுச்சேரியில் அமைதியாக முடிந்தது. ஆனால் தமிழகத்தில் கலவரம் ஏற்பட்டு போலீஸ் தடியடியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்கள் எதிர்த்ததால் மத்திய அரசு கைவிட்டது. ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply