மத்திய பிரதேசத்தில் உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை
மத்திய பிரதேச மாநிலம் கஜுராகோவை சேர்ந்தவர் அரவிந்த் பட்டேல். இவர், கஜுராகோ கோவிலில் தனியார் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரேம் குமாரி கர்ப்பமாக இருந்தார். இது முதல் கர்ப்பம் ஆகும். நிறை மாதமாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து கஜுராகோ ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் இதயம் மார்புக்கு வெளியே வந்து தொங்கியபடி இருந்தது. ஆனாலும், குழந்தை உயிருடன் இருந்தது.
இதனால் தாயையும், குழந்தையையும் ஜத்தர்பூர் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தது. எனவே, குவாலியர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு மார்பில் ஆபரேசன் செய்து இதயத்தை உள்ளே வைக்க வேண்டும். இதற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை செலவாகும் என்று டாக்டர்கள் கூறினார்கள்.
எனவே, தற்போது போபாலில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆபரேசன் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதயம் வெளியே இருப்பதால் குழந்தை ஆபத்தான நிலையிலேயே இருக்கிறது. உலகில் பிறக்கும் 10 லட்சத்தில் 8 குழந்தைகளுக்கு இது போன்று இதயம் வெளியே தொங்கியபடி பிறப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply